காசாவில் கைகள்,கண்கள் கட்டப்பட்ட நிலையில் பாலஸ்தீனர்கள் உடல்கள் கண்டுபிடிப்பு!
31 Jan,2024
கைகள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் 30பாலஸ்தீனர்களின் உடல்கள் உரப்பையினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் படையினர் வெளியேறிய நிலையில் வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லாஹியாவில் உள்ள ஒரு பாடசாலையின் மைதானத்தில் இருந்து இந்த உடல்கள் இன்று (31) புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
30 தியாகிகளின் உடல்கள்
பாலஸ்தீனிய கைதிகள் கிளப் வெளியிட்ட அறிக்கையில், "ஆக்கிரமிப்பு இராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட பள்ளி ஒன்றில் 30 தியாகிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை" உறுதிப்படுத்தியது.
"அவர்கள் கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்டிருந்தனர்.அதாவது, அவர்கள் கைது செய்யப்பட்டனர், இது ஆக்கிரமிப்பு இராணுவம் அவர்களுக்கு எதிராக கள மரணதண்டனையை மேற்கொண்டது என்பதற்கு தெளிவான அறிகுறியாகும்" என்று அறிக்கை கூறியது.
"விடுவிக்கப்பட்ட கைதிகளின் சாட்சியங்களின்" அடிப்படையில், காசாவில் மரணதண்டனைகள் அதிகரித்து வருவதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன என்று அமைப்பு கூறியது.
கொல்லப்பட்டோரின் தொகை அதிகரிப்பு
இதேவேளை காசாவின் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடங்கி காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையில் 26,900 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 65,949 பேர் காயமடைந்துள்ளனர்.
பாலஸ்தீனிய மற்றும் சர்வதேச மதிப்பீடுகள் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.