ரஷ்யவிமான விபத்தில் 65 உக்ரைன் போர்க் கைதிகள் உள்பட 74 பேர் உயிரிழப்பு!
24 Jan,2024
ரஷ்ய ராணுவ விமான விபத்தில் உக்ரேனிய போர்க்கைதிகள் 65 பேர் உள்பட 74 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 65 உக்ரைன் போர்க் கைதிகள் மற்றும் ஆறு பணியாளர்கள், மூன்று பேரை ஏற்றிச் சென்ற IL-76 சரக்கு விமானம் உக்ரைன் எல்லைப் பகுதிக்கு அருகில் விழுந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இன்று ஏற்பட்ட இந்த விபத்தில் 65 உக்ரைன் போர்க்கைதிகள் உட்பட அனைவரும் கொல்லப்பட்டதாக கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கொரோசான்ஸ்கி மாவட்டத்தில் விமானம் விபத்துக்குள்ளாகி கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் விழுந்தது. அதில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்" என்று கூறினார். சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்யப் போவதாக கூறிய அவர், புலனாய்வுத்துறையினர் மற்றும் அவசரகால பணியாளர்கள் ஏற்கெனவே சம்பவ இடத்தில் இருப்பதாக கூறினார்.
ஆனால், உக்ரேன் படைகள், தங்களது ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில்," உள்ளூர் நேரப்படி இன்று காலை 11 மணியளவில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விமானத்தின் போது 65 உக்ரைன் போர்க்கைதிகள் மற்றும் 6 பணியாளர்கள், 3 காவலர்களை ஏற்றிச் சென்ற IL-76 சரக்கு விமானம் பெல்கொரோட் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. உக்ரைன் படைகளால் ஏவப்பட்ட ஏவுகணைகள் மூலமே விமானம் வீழ்த்தப்பட்டது" என்று குற்றம் சாட்டியுள்ளது. இந்த விபத்து குறித்து வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
உக்ரைனின் எல்லையில் இருக்கும் பெல்கொரோட் பகுதி, சமீபத்திய மாதங்களில் உக்ரைனின் தாக்குதல்களுக்கு அடிக்கடி உட்பட்டுள்ளது, இதில் டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது