ஜாம்பியா நாட்டை அச்சுறுத்தும் காலரா, 10,000 பேர் பாதிப்பு, 400 பேர் பலி
20 Jan,2024
ஜாம்பியா நாட்டில் காலரா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 400க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளதால் பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ஜாம்பியா நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் காலரா தொற்று துவங்கியது. கடந்த ஆறு மாதத்தில் இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் காலரா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் 412 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தலைநகர் லூசாக்காவில் உள்ள கால்பந்து மைதானம் தற்காலிக மருத்துவ முகாமாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜாம்பியா நாட்டில் உள்ள 10 மாகாணங்களில், 9 மாகாணங்களில் காலரா நோய் தொற்று தீவிரமாக பரவி வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சுமார் 20 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்நாட்டில், தினந்தோறும் 400 க்கும் மேற்பட்டோர், காலரா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. காலரா நோய் தொற்று ஏற்பட்ட 4 சதவீதம் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக யுனிசெஃப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
ஜாம்பியா மட்டுமின்றி, அருகாமை நாடுகளான மலாவி, மொசாம்பிக், ஜிம்பாவே உள்ளிட்ட நாடுகளிலும் காலரா நோய் தொற்று அதிகரித்து வருவதாக அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதையடுத்து ஜாம்பியா நாட்டின் அரசாங்கம் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சில பகுதிகளுக்கு மட்டும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான பகுதிகளிலும் மோசமான, அசுத்தமான குடிநீரையே பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதால் காலரா நோய் தொற்று மேலும் அதிகரிக்கும் என்கிற அச்சம் எழுந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 60,000 பேர் அமரக்கூடிய லூசாக்கா கால்பந்து மைதானத்தில், தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.