சிரியாவில் இஸ்ரேல் திடீர் ஏவுகணை தாக்குதல், 5 பேர் பலி
20 Jan,2024
சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் இன்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 4 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள 4 மாடி கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், ஈரான், பாலஸ்தீன ஆதரவு கொண்ட குழுவை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் கண்காணிப்பு அமைப்பை கொண்ட பிரிட்டிஷ் சார்பு தகவல்கள் படி, இஸ்ரேல் தாக்குதல் நடத்திய இடமானது, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி) மற்றும் ஈரான் சார்பு பாலஸ்தீனிய பிரிவுகளின் தலைவர்கள் இருந்து வந்த உயர் பாதுகாப்பு மண்டலமாகும். இந்த அமைப்புகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். டமாஸ்கஸ் அருகே மஸ்ஸே சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
சிரியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலான உள்நாட்டுப் போரில், இஸ்ரேல் அந்நாட்டில் நூற்றுக்கணக்கான விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறிப்பாக ஈரான் ஆதரவு படைகள், சிரிய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கி வருகிறது.
லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள், ஆயுதக் குழுக்கள் சிரியா, ஏமன், லெபனான் போன்ற நாடுகளில் இருந்தவாறு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் உள்ள தனது எதிரிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.