191 குழந்தைகள் உட்பட 429 பேரை கொன்ற மத போதகர்,கென்யா நாட்டில் பயங்கரம்
20 Jan,2024
உலகம் அழியும் முன் உண்ணாவிரதம் இருக்க வலியுறுத்தி 191 குழந்தைகள் உட்பட 429 பேரை கொன்ற சாமியாரை கென்யா போலீசார் கைது செய்துள்ளனர். கென்யா நாட்டின் கடலோர நகரமான மலிண்டியில் ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பின் மத போதகர் பால் மெக்கென்சி என்பவர் செயல்பட்டு வந்தார். வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்களிடம், உலகம் அழியும் முன் காலவரையின்றி உண்ணாவிரதம் இருக்குமாறும், அதன் மூலம் கடவுளை அடையலாம் என்று பால் மெக்கென்சி அறிவுறுத்தி வந்தார். இவரது பேச்சை நம்பி பலர் பட்டினி இருந்தனர். அவர்களில் பலர் இறந்தனர். இருந்தாலும் பலரை கொடுமை செய்தும், கழுத்தை நெரித்தும், மூச்சுத் திணற வைத்தும் பால் மெக்கென்சியும், அவரது சீடர்களும் கொன்றுள்ளனர். இவ்விவகாரம் வெளியே தெரியவே, புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், பால் மெக்கென்சியும், அவரது சீடர்களும் இணைந்து 191 குழந்தைகள் உட்பட 429 பேரைக் கொன்றதாக பகீர் தகவல் கிடைத்தது. அதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட பால் மெக்கென்சி மற்றும் அவரது சீடர்கள் 30 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கென்யாவின் கடலோர நகரமான மலிண்டியில் அமைந்துள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். உயர் நீதிமன்ற நீதிபதி முகுரே தாண்டே பிறப்பித்த உத்தரவில், ‘பால் மெக்கென்சி உள்ளிட்டோருக்கு உளவியல் ரீதியான சோதனைகளை நடத்த வேண்டும்’ என உத்தரவிட்ட நீதிபதி, கைதானவர்களின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி, கொலை செய்யப்பட்ட 191 குழந்தைகளில் 180 குழந்தைகளின் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், ஷகாஹோலா வனம் என்று அழைக்கப்படும் 800 ஏக்கர் பண்ணையில் டஜன் கணக்கான கல்லறைகளில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட சில உடல்களை பிரேதப் பரிசோதனை செய்த போது, பலரை பலவந்தமாக கொன்றது தெரியவந்துள்ளது. கென்யாவில் 191 குழந்தைகள் உட்பட 429 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.