இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழப்பு
19 Jan,2024
ரபா: காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். கடந்தாண்டு அக்டோபரில் ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து தொடரப்பட்ட போர் 100 நாட்களை கடந்து நீடிக்கிறது. இதில் 24,448 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 60,000க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 23 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அதே நேரம், 9,000 ஹமாஸ் படையினரை கொன்றிருப்பதாகவும் தனது தரப்பில் 193 வீரர்களை இழந்திருப்பதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் படையினரை முற்றிலும் ஒழிப்பதை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் பொதுமக்களில் பெரும்பாலும் குழந்தைகள், பெண்களும் கொல்லப்படுகின்றனர். இஸ்ரேல் கைப்பற்றியுள்ள காசாவில் உள்ள ரபா பகுதியில் அந்நாட்டு ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வேறு இடங்களில் தஞ்சம் அடைந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் தெற்கு காசா பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்பட 16 பேர் பலியானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சர்வதேச அமைப்புகள் பணயக்கைதிகளுக்காக அனுப்பும் ஒவ்வொரு மருந்து பெட்டியில் இருந்து 1,000 பாலஸ்தீனர்களுக்கு மருந்து வழங்கப்படும் என்று ஹமாஸ் தெரிவித்திருந்தது.