தாய்லாந்தில் சோகம்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 23 பேர் உடல் சிதறி பரிதாப பலி
18 Jan,2024
பாங்காக்: தாய்லாந்து நாட்டில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 23 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். சீன புத்தாண்டு அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளதால் பட்டாசு தேவை அதிகம் உள்ளது. இதனால் தாய்லாந்து நாட்டில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தாய்லாந்து நாட்டின் முவாங் மாவட்டத்தில் தம்போன் சலகாவோ நகரில் சுபான் புரி பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் நேற்று மாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த ஆலையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டதும் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் இந்த வெடி விபத்தில் சிக்கி 23 பேர், உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயத்துடன் அலறி துடித்தனர்.
இந்த சம்பவத்தில் பட்டாசு ஆலை இடிந்து முற்றிலுமாக தரைமட்டமானது. அந்த இடமே கரும்புகையால் சூழப்பட்டது. தகவலறிந்து தேசிய பேரிடர் தடுப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தேசிய பேரிடர் தடுப்பு படையினர், போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 23 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் பலரது உடல்கள் துண்டு துண்டுகளாக சிதறியதால் அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிவிபத்து நடந்ததில், 100 மீட்டர் தொலைவுக்கு பொருட்கள் பரவி கிடந்தன. படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது, ஆலையின் உரிமையாளர் இல்லை. அவர் வாடிக்கையாளர்களுக்கு பட்டாசுகளை வழங்குவதற்காக வெளியே சென்று விட்டார்.
பண்ணை இல்லத்திற்கு வெளியே அமைந்த ஆலையில், வெடிபொருட்கள் மற்றும் பட்டாசு தயாரிப்புக்கான பொருட்கள் ஆகியவை சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள தாய்லாந்து பிரதமர் ஷ்ரெத்தா தவிசின், ஆலை விபத்து பற்றி அறிந்ததும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஆய்வு செய்து விரைந்து விசாரணை நடத்தும்படி தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.