நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம், சிலியில் நடந்த விபத்தில் விமானி பலி
17 Jan,2024
பான்கெல்மோ: சிலி நாட்டில் நடந்த பயங்கர விமான விபத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் விமானி தீயில் கருகி பலியானார். சிலி நாட்டின் தேசிய வனவியல் கழகத்தில் பணியாற்றி வந்த விமானி பெர்னாண்டோ சோலன்ஸ் (58) என்பவர் தலைமையிலான குழுவினர், ஐயர்ஸ் டர்போ ட்ரூஷ் என்ற தீயணைப்பு விமானத்தில் பயணம் செய்தனர். அந்த விமானத்தை சோதனை முறையில் இயக்கிய போது, திடீரென விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. பான்கெல்மோ விமான நிலையம் அருகே நடந்த இந்த விபத்தில், பறவை ஒன்று விமானத்தின் இறக்கையில் மோதியதால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்பு விமானம் அந்தரத்தில் தீப்பிடித்து எரிந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் நடுரோட்டில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் இருந்த விமானி பெர்னாண்டோ சோலன்ஸ் தீயில் கருகி உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர். தீயணைப்பு விமானம் சாலையில் சென்ற வாகனங்கள் மீது விழாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சாலையில் நின்று கொண்டிருந்த பயணிகள் சிலர் படம் பிடித்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சிலி நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.