ஆசியாவில் காற்று மாசுபாடினால் ஓராண்டில் 3,55,000 பேர் பலி
12 Jan,2024
லண்டன்: தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நகரங்களில் கண்ணுக்கு புலப்படாத காற்று மாசுபாடு காரணமாக இறப்புகள் அதிகரித்துள்ளது. 2018ம் ஆண்டில் தெற்கு ஆசியாவில் 2,75,000 பேரும், தென் கிழக்கு ஆசியாவில் 80,000 பேரும் இறந்துள்ளனர். ஆசியாவின் வெப்ப மண்டல பகுதி நகரங்களில் காற்று மாசுபாடுகள் எந்த அளவு உள்ளது என்பது குறித்து லண்டனை சேர்ந்த கர்ன் வோஹ்ரா என்பவர் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் உள்ள நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் காற்று மாசுபாட்டினால் முன்கூட்டியே இறக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். தெற்காசியாவில் அகமதாபாத், பெங்களூர், சென்னை, சிட்டகாங், டாக்கா, ஹைதராபாத், கராச்சி, கொல்கத்தா, மும்பை, புனே மற்றும் சூரத் மற்றும் பாங்காக், ஹனோய், ஹோ சி மின் நகரம், ஜகார்த்தா, மணிலா, நோம் பென், யாங்கூன் ஆகிய நகரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நகரங்கள் நைட்ரஜன் டை ஆக்சைடில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகின்றன. இது ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு சிட்டகாங்கில் (வங்கதேசம்) மூன்று மடங்காகவும், டாக்கா (வங்கதேசம்) மற்றும் ஹனோயில் (வியட்நாம்) 14 வருட காலப்பகுதியில் இரட்டிப்பாகவும் அதிகரித்துள்ளது.
இவை வாகன போக்குவரத்து மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வெளியேறும் உமிழ்வுடன் சம்மந்தப்பட்டது. 2005ல் அறிமுகப்படுத்தப்பட்ட காற்றின் தர நடவடிக்கைகளினால், ஜகார்த்தாவில் (இந்தோனேஷியா) மட்டுமே நைட்ரஜன் டை ஆக்சைடு குறைந்துள்ளது. காற்று மாசுபாடினால் கடந்த 2018ல் தெற்காசியாவில் 2,75,000 பேரும், தென் கிழக்கு ஆசியாவில் 80,000 பேரும் இறந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.