இஸ்ரேல் மீது 62 ஏவுகணைகளை வீசித் தாக்கியது ஹிஸ்புல்லா
07 Jan,2024
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷேக் சலே அல் அரூரியைக் கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடக்கு இஸ்ரேல் மீது 60 ஏவுகணைகளை வீசி ஹெஸ்புல்லா அமைப்பு இன்று காலையில் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் தெற்கு பெய்ருட் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் ஷேக் சலே அல் அரூரி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதல் இஸ்ரேலால் நடத்தப்பட்டது என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேல் இதற்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்த சூழலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹாஸன் நஸ்ரல்லா 'அரூரி கொலைக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும்' என இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த சூழலில் இஸ்ரேல் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஹிஸ்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சிறந்த தலைவரான ஷேக் சலே அல் அரூரியைக் கொலை செய்த குற்றத்திற்காக பதிலடி கொடுக்கவுள்ளோம். அதில் முதன்மைத் தாக்குதலாக இஸ்ரேலின் மெரோன் வான் கட்டுப்பாட்டு தளத்தைக் குறிவைத்து 62 பலவகைப்பட்ட ராக்கெட்டுகளை ஏவியுள்ளோம்' என தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடங்கியிருக்கும் இந்தப் போரில், இஸ்ரேல் - லெபனான் எல்லையில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே அடிக்கடி தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக தொடரும் இந்தத் தாக்குதல்களில் லெபனானில் 129 ஹிஸ்புல்லா அமைப்பினர் உள்பட 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 3 பத்திரிகையாளர்களும் அடங்குவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல வடக்கு இஸ்ரேலில் இதுவரை ஒன்பது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மற்றும் நான்கு பொதுமக்கள் இறந்துள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே காசா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது, இதில் இதுவரை 22,500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த சூழலில் வடக்கு இஸ்ரேல் எல்லையில் ஹிஸ்புல்லாக்களும் தாக்குதலை தொடங்கியுள்ளதால் கடுமையான பதற்றம் நிலவுகிறது.