தங்கச்சுரங்கத்தில் நிலச்சரிவு,11 தொழிலாளர்களின் கதி என்ன?
06 Jan,2024
ஜிம்பாப்வே நாட்டில் தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 11 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதை அடுத்து மீட்புப்பணிகள் துரிதப்பட்டுள்ளன.
ஜிம்பாப்வே நாட்டின் தலைநகர் ஹராரே நகரில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் ரெட்விங் தங்கச்சுரங்கம் அமைந்துள்ளது. இந்த தங்கச்சுரங்கத்தை மெட்டலான் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் நடத்தி வருகிறது.
இந்த சுரங்கத்தில் நேற்று 11-க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால், 11 தொழிலாளர்களுக்கும் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும், அந்நாட்டின் சுரங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மெட்டலான் நிறுவன அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப்பணிகளைத் தொடக்கினர். இருப்பினும் சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் மண் மிகவும் இலகுவாக இருப்பதால், மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒரு இடத்தில் தோண்டினால், மற்றொரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டு வருவதால், மீட்புப்பணிகளை கவனத்துடன் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஜிம்பாப்வேயில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளே சிக்கியுள்ள 11 தொழிலாளர்களும் தற்காலிக தொழிலாளர்கள் ஆவர். அவர்களது குடும்பத்தினர் கண்ணீருடன் சுரங்கத்தின் முன்பு குவிந்துள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டு இந்த சுரங்கத்தில் போதுமான தங்கம் கிடைக்கவில்லை எனக்கூறி தனியார் நிறுவனம் கைவிடுவதாக அறிவித்திருந்தது. இதனால் நிரந்தர தொழிலாளர்களின்றி, தற்காலிக தொழிலாளர்களைக் கொண்டு தங்கமண் வெட்டி எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக மெட்டலான் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜிம்பாப்வேயில் இவ்வாறான அனுமதி பெறாத ஏராளமான தங்கச்சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்களின் வறுமையைப் பயன்படுத்தி, தனியார் நிறுவனங்கள், தற்காலிக தொழிலாளர்களை இது போன்ற ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் செங்குட்டு மாவட்டத்தில் தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 10 தொழிலாளர்கள் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.