கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்: தந்தை,மகள்கள் உள்பட 4 பேர் பலி!
06 Jan,2024
கரீபியன் தீவு பகுதியில் கடலில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இதில் தந்தை, 2 மகள்கள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிற்கு அருகில் உள்ள கரீபியன் தீவுகள் பகுதிக்கு உட்பட்ட செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரானாடைன்ஸ் தீவில் உள்ள ஜே.எஃப்.மிச்சல் விமான நிலையத்திலிருந்து, சிறிய ரக விமானம் செயின்ட் லூசியா நோக்கி புறப்பட்டது.
இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. சற்று நேரத்தில் அந்த விமானம் கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடற்படை போலீஸாரும், மீட்பு படையினரும் கடலில் விமானம் விழுந்த இடம் நோக்கி விரைந்து சென்றனர். அந்த விமானத்தைக் கண்டறிந்து சோதனையிட்டனர். அப்போது விமானத்தில் இருந்த 4 பேரும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
இதில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டியன் கிளப்ஸர் (51) அவரது மகள்கள் மடிட்டா (10), ஆனிக் கிளப்சர் (12) ஆகியோர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. மேலும் விமானியும், விமானத்தின் உரிமையாளருமான ராபர்ட் சாக்ஸும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து மீனவர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்போதைக்கு நான்கு பேரின் உடல்களும் நீக்கப்பட்டுள்ள நிலையில், விமான பாகங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகி இருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.