சரக்கு கப்பலை கடத்திய சோமாலியா கடற்கொள்ளையர்கள்,15 இந்தியர்களின் கதி என்ன?
05 Jan,2024
சோமாலியா கடற்கரை அருகே 15 இந்திய பணியாளர்களுடன் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை மீட்பதற்காக ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் விரைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஏடன் வளைகுடா மற்றும் வடக்கு அரபிக் கடலில் கடந்த சில நாட்களாக கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடற்படை போர்க்கப்பல்கள் அரபிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் தீவிர ரோந்துப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சோமாலியா கடற்கரையோரம் பயணித்துக் கொண்டிருந்த எம்வி லிலா நார்ஃபோல்க் என்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் திடீரென கடத்திச் சென்றனர். லைபீரிய நாட்டு கொடியுடன் பயணித்து வந்த அந்தக் கப்பல், பிரேசில் நாட்டில் இருந்து பக்ரைன் நாட்டை நோக்கி சரக்குகளுடன் பயணித்துக் கொண்டிருந்தது.
கடந்த 30ம் தேதிக்கு பிறகு அந்த கப்பலுடனான தகவல் தொடர்பை இழந்துவிட்டதாக வெசல் பைண்டர் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய தகவல்களின்படி அந்த கப்பலில் 15 க்கும் மேற்பட்ட இந்திய பணியாளர்கள் உள்ளனர். இது குறித்த தகவல் அறிந்ததும் இந்திய கடற்படையை சேர்ந்த ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. கப்பலில் இருக்கும் பணியாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர விரைந்து வருவதாகவும் இந்திய கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் காரணமாக ஏற்கெனவே இந்த பகுதியில் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது கடத்தல் சம்பவம் குறித்து தகவல் வெளியானதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. கப்பலில் தற்போது 5 அல்லது 6 அடையாளம் தெரியாத ஆயுதம் தாங்கிய நபர்கள் அத்துமீறி நுழைந்திருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.