இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்,3 பேர் பலி, 28 பேர் படுகாயம்!
05 Jan,2024
இந்தோனேசியாவில் இன்று காலை இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிக்கலெங்காவில் உள்ளூர் நேரப்படி காலை 6:03 மணிக்கு இந்த விபத்து நடந்தது. இதில் இரு ரயில்களின் ஏராளமான பெட்டிகள் கவிழ்ந்தன.
இந்த விபத்து குறித்து ரயில்வே செய்தித் தொடர்பாளர் அயன் ஹனேபி கூறுகையில், கிழக்கு ஜாவாவில் உள்ள சுரபாயாவிலிருந்து, பண்டுங் நகரத்துக்கு துரங்கா ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலும், உள்ளூர் பயணிகள் ரயிலும் மோதிக் கொண்டன. துரங்கா ரயிலில் 287 பயணிகளும், உள்ளூர் பயணிகள் ரயிலில் 191 பேரும் பயணித்தனர். இரு ரயில்களும் மோதிக் கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
28 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய ரயில் பெட்டிகளிலிருந்து அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டு விட்டனர்" என்றார்.
இந்தோனேசியாவில் போக்குவரத்து விபத்துகள் அடிக்கடி நடக்கக் கூடியவையாக உள்ளன. அந்நாட்டில் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் மிக மோசமாக பராமரிப்பின்றி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.