ஹமாஸ் சுரங்கப்பாதையை அழித்தது இஸ்ரேல்: கடந்த 24 மணி நேரத்தில் 200 பேர் உயிரிழப்பு
31 Dec,2023
இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் தீவிரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த1,200 பேர் உயிரிழந்தனர்.மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்து தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.
இதுவரை நடந்த இஸ்ரேல் ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில்மட்டும் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதிலடியாக காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 20 ஆயிரத்து 424 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காசா முனையில் தரைவழி தாக்குதலின்போது ஹமாஸ் ஆயுதக்குழுவுடன் நடந்த மோதலில் இதுவரை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 157 பேர்உயிரிழந்துள்ளனர்.அதேவேளையில், பாலஸ்தீனத்தின் மேற்குகரையிலும் வன்முறை வெடித்துள்ளது. காசா மேற்கு கரையில் இதுவரை 303 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்நிலையில், காசா முனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும்மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும்129 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
இந்தச் சூழலில் நேற்று முன்தினம் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதை வளாகத்தை இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல் நடத்தி அழித்தன. மேலும் அங்கு நடந்த தாக்குதலில் கடந்த 24மணி நேரத்தில் 200 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. மத்திய காசா பகுதியிலுள்ள நுசரைத் கேம்ப் பகுதியில் தொடர்ந்து வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுரங்கப்பாதை வளாகத்தை அழித்ததன் மூலம் காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் முன்னேறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட் கூறியதாவது:
இஸ்ரேல் படைகள், ஹமாஸின் சுரங்கப்பாதை வளாகத்தை கடும் தாக்குதல் நடத்தி அழித்துள்ளன. மேலும் ஹமாஸ் அமைப்பினரின் கமாண்ட் மையங்கள், ஆயுத வளாகங்கள் ஆகியவற்றை இஸ்ரேல் படைகள் முற்றுகையிட்டு கைப்பற்றியுள்ளன.அதுமட்டுமல்லாமல் காசாவின் பெரும்பாலான பகுதிகளில் இஸ்ரேல் படைகள் முன்னேறியுள்ளன. இவ்வாறு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட் தெரிவித்தார்.