உக்ரைனில் இன்று அதிகாலை ரஷ்யா நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கடந்த 2022 பிப்ரவரி முதல் உக்ரைனில் ரஷ்யா போர்த்தொடுத்துள்ளது. இந்த போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நெருங்கியுள்ளது. இருநாடுகள் தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைனில் குடிமக்களும் ஏராளமானோர் ரஷ்ய ராணுவ தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உக்ரைன் தலைநகரான கீவில் இன்று அதிகாலை பல இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததாகவும், ஆங்காங்கே கரும்புகைகள் சூழ்ந்து காணப்படுவதாகவும், சர்வதேச ஊடக நிறுவனமான 'ஏஃஎப்பி' செய்தி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் கூறுகையில், “எங்களது கண்காணிப்பின்படி நீண்டகாலமாக இவ்வளவு வீரியமான தாக்குதலை கண்டதில்லை. ரஷ்ய படைகள் முதலில் ட்ரோன் தாக்குதலை நடத்தின. அதைத் தொடர்ந்து ஏவுகணைகளை வீசின” என்றார்.
உக்ரைனின் வடகிழக்கில் கார்கிவ், மேற்கில் லிவிவ், கிழக்கில் டினிப்ரோ மற்றும் தெற்கில் ஒடிசே உள்ளிட்ட ஐந்து உக்ரைன் நகரங்களில் இன்று காலை ரஷ்யா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அந்நகரங்களின் மேயர்கள் மற்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதில், மருத்துவமனை, கல்விக்கூடங்கள், ஷாப்பிங் மால், அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் இடிந்து விழுந்து தீப்பற்றி எரிகின்றன. இந்த சேத காட்சிகளை உக்ரைன் அதிபர் வோலடிமிர் ஜெலன்ஸ்கி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
"கார்கிவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 22 தாக்குதல்கள் நடந்துள்ளதை நாங்கள் கணக்கிட்டுள்ளோம்" என்று மேயர் இகோர் டெரெகோவ் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ராணுவம் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் உக்ரைனில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே உக்ரைனுக்கு ரூ.2080 கோடி (250 மில்லியன் டாலர்) மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா நேற்று அறிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று அறிவிக்கப்பட்ட 250 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிக்காக, அதிபர் ஜோ பைடன், காங்கிரஸ் மற்றும் அமெரிக்க மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.