பாகிஸ்தானில் துரத்தும்,தீ, 10 உயிர்கள் பலியான விபத்தை அடுத்து, ஒரே குடும்பத்தின் 9 பேர் பலி
24 Dec,2023
.
வடமேற்கு பாகிஸ்தானில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயினால், ஒரு பெண்ணும் அவரது எட்டு குழந்தைகளும் இன்று உயிரிழந்துள்ளனர். இதே போன்ற இன்னொரு தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சில மாதங்களுக்கு முன்னர் பலியானது நடந்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அபோதாபாத் மாவட்டத்தில் உள்ள தஹாரி கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு பெண் மற்றும் அவரது எட்டு குழந்தைகள் இந்த விபரீத தீ விபத்தில் கொல்லப்பட்டனர். உயிரிழந்த குழந்தைகளில் நால்வர் பெண் குழந்தைகளாகும்.
.
மீட்பு பணி குழுக்கள், அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ்கள் ஆகியவை வரவழைக்கப்பட்டபோதும், மின்கசிவு காரணமாக எழுந்த தீ விபத்தில் சிக்கிய எவரையும் காப்பாற்ற முடியவில்லை. கைபர் பக்துன்க்வாவின் காபந்து முதல்வர் அர்ஷத் ஹுசைன், இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம், லாகூரில் உள்ள பதி கேட் பகுதியில் உள்ள வீட்டில் குளிர்சாதனப்பெட்டியின் கம்ப்ரசர் வெடித்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். அந்த குடும்பத்தின் ஒருவர் மட்டும், எரியும் கட்டிடத்தில் இருந்து கீழே குதித்ததில் உயிர் தப்பினார். பலியானவர்களில் ஒரு ஆண், அவரது மனைவி, மேலும் இரண்டு பெண்கள், ஐந்து குழந்தைகள் மற்றுமொரு ஏழு மாத குழந்தையும் அடங்கும்.
.
குளிர்சாதனப்பெட்டியின் கம்ப்ரஸரில் ஏற்பட்ட வெடிவிபத்தால் தீ விபத்து ஏற்பட்டதாக மீட்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் மத்தியில் மின்கசிவு தொடர்பான தீ விபத்து குறித்து விழிப்புணர்வு பரப்பப்பட்டு வந்தது. ஆனபோதும் அவற்றின் மத்தியில், மற்றுமொரு மின்சார - தீ விபத்தில் ஒரே குடும்பத்தின் 9 பேர் பலியாகி உள்ளனர்.