இந்தியக் கடலோரப் பகுதியில் கப்பல் மீது டிரோன் தாக்குதல், தீப்பற்றி எரிவதால் பரபரப்பு!
23 Dec,2023
அரபிக் கடற்பகுதியில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது டிரோன் தாக்குதலால் தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து உதவிக்கு இந்திய கடற்படை கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.
'எம்.வி. செம் புளூட்டோ' என்ற வணிகக் கப்பல் செளதி அரேபியாவிலிருந்து மங்களூருக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்தது. இந்த கப்பல், குஜராத்தின் போர்பந்தரிலிருந்து கடலுக்குள் 217 நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது, டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இந்த கப்பலில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. 'எம்.வி. செம் புளூட்டோ' கப்பலில் இந்தியர்கள் 20 பேர் பணிபுரிகின்றனர். இந்நிலையில் கப்பல் தீப்பிடித்தது குறித்து அறிந்த இந்திய கடற்படையின் கப்பல்கள் மற்றும் இந்திய கடலோர காவல் படையின் கப்பல் 'ஐசிஜிஎஸ் விக்ரம்' ஆகியவை, 'எம்.வி. செம் புளூட்டோ' கப்பலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
அங்கிருந்து கிடைக்கும் தகவலின்படி, கப்பலில் உள்ள 20 இந்திய மாலுமிகளும் பத்திரமாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை கப்பல்கள் மட்டுமின்றி, அந்த பகுதியைக் கடந்து செல்லும் இதர கப்பல்களுக்கும், 'எம்.வி. செம் புளூட்டோ' கப்பலுக்கு தேவையான உதவிகளைச் செய்யுமாறு சமிக்ஞைகள் அனுப்பப்பட்டுள்ளது என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.