பல்கழகத்தில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் மரணம்!!
22 Dec,2023
செக் குடியரசு நாட்டின் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஐரோப்பிய நாடான செக் குடியரசின் தலைநகர் பிரேக் அருகே பலாச் சதுக்கத்தில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கியுடன் புகுந்த இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதனால் மாணவர்கள் அனைவரும் சிதறி ஓடிய நிலையில், 15க்கும் அதிகமானோர் உடலில் குண்டு பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி இளைஞரை சுட்டுக் கொன்றனர். மேலும் அப்பகுதியை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் சார்லஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் டேவிட் கோஸக் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் என்ன காரணத்திற்காக அந்த மாணவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது இதுவரை தெரியவில்லை. அதேநேரம் இந்த தாக்குதல் பயங்கரவாத கும்பலில் சதி இல்லை என செக் குடியரசு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்னதாக டேவிட் கோஸக்கின் தந்தையின் சடலம் கண்டறியப்பத்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் ஒரு நாள் துக்க தினமாக செக் குடியரசு அரசு அறிவித்துள்ளது. அந்நாட்டின் அரசு அலுவலகங்கள், முக்கிய இடங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது.