மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் புயல் காற்று, கனமழை: அர்ஜெண்டினாவில் 14 பேர் பலி
18 Dec,2023
அர்ஜெண்டினாவில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் புயல் காற்று, கனமழை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். அருகாமை நாடான உருகுவேவும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. புயல் மழையின்போது, பஹியா பிளான்காவில் உள் விளையாட்டு அரங்கில் சறுக்குப் போட்டி நடத்தப்பட்டு கொண்டிருந்தது. அப்போது, கடும் மழை, புயல் காற்று வீசியதால் விளையாட்டு அரங்கின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த அர்ஜெண்டினா அதிபர் ஜாவியர் மிலேய், பஹியா பிளான்காவுக்கு அமைச்சர்களுடன் சென்று பாதிப்பு நிலவரத்தை பார்வையிட்டார். மேலும், அங்கு மேற்கொள்ள வேண்டிய நிவாரப் பணிகளை முடுக்கிவிட்டார்.
இதபோல் அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அய்ரெஸிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள மோர்னோ நகரில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார். அர்ஜெண்டினாவில் கடும் புயல், கன மழையால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் அருகாமை நாடான உருகுவேவும் புயல் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. அந்நாட்டில் பல்வேறு இடங்களி்ல் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. வீடுகள், கட்டிடங்களின் மேற்கூரைகள் காற்றில் தூக்கிவீசப்பட்டன. உருகுவேவில் புயல் பாதிப்புக்கு இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.