சுரங்கப்பாதையில் மோதிக்கொண்ட ரயில்கள், 102 பயணிகளுக்கு எலும்பு முறிவு
15 Dec,2023
.
சீனாவில் சுரங்கப்பாதையில் 2 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 515 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் கடந்த சில நாட்களாக வடக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங்கிலும் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனிடையே தொடர் பனிப்பொழிவு காரணமாக விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சுரங்கப் பாதை ஒன்றில் இரண்டு அதிவேக ரயில்கள் சென்று கொண்டிருந்தது.
கடும் பனிப்பொழிவு காரணமாக தண்டவாளத்தில் பனி தேங்கி இருந்ததால் வழுக்கும் நிலை உருவானது. இதனால் முன்னால் சென்ற ரயிலின் தானியங்கி பிரேக் தூண்டப்பட்டு, ரயில் நின்றுள்ளது. இதனால் பின்னால் வந்த ரயிலும் உடனடியாக பிரேக் போட முடியாமல், முன்னால் நின்ற ரயில் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் 515 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதில் 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவ பணியாளர்கள், போலீஸார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணிகளை துவங்கினர். கடும் பனிப்பொழிவு காரணமாக ஏற்கெனவே சீனாவில் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் -7 செல்சியஸ் அளவிற்கு குளிர் வாட்டி வதைத்து வருவது குறிப்பிடத்தக்கது.