பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் - 23 பேர் மரணம்; 27 பேர் படுகாயம்
12 Dec,2023
,
பாகிஸ்தான் தேரா இஸ்மாயில் கன் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய தலைமையகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் வடக்கு பகுதியில் கைபர் பக்துவா மாகாணம் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் இன்று அதிகாலை வெடிபொருட்களை ஏற்றிய வாகனத்தில் வந்த தற்கொலைப் படை தீவிரவாதி அங்குள்ள காவல் நிலைய தலைமையகம் மீது மோதி வெடிக்கச் செய்தார். இதில் 23 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்போடு தொடர்புடைய தேஹ்ரீக் இ ஜிஹாத் பாகிஸ்தான் (Tehreek-e-Jihad Pakistan) என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 2.30 மணியளவில் பாகிஸ்தானின் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 27 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணியும் நடைபெற்று வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் போலீஸாருடன் நடந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அந்தப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கிறார்களா என்று போலீஸார் தேடி வருகின்றனர்.
தாக்குதல் நடந்த இடம் தலிபான் தீவிரவாதிகள் ஆட்சி நடக்கும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சி துவங்கிய பிறகு அதிகமான தாக்குதல்கள் பாகிஸ்தானில் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. 2023ம் ஆண்டின் முதல்பாதியில் தாக்குதல்களின் எண்ணிக்கை 80% உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.