வகுப்பறைக்குள் புகுந்து 6 பேரைச் சுட்ட 14 வயது சிறுமி,தன்னைத் தானே சுட்டு தற்கொலை!
07 Dec,2023
ரஷ்யாவில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த சிறுமி, 6 பேரை சுட்டுவிட்டு தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் பிரையன்ஸ்க் மாகாணத்தில் இன்று காலை பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்றபோது 6 மாணவர்கள் படுகாயம் அடைந்ததோடு, 14 வயதான சிறுமி ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டவர்களில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் இன்று காலை பள்ளிக்கு, கருப்பு உடையில் வந்த சிறுமி தனது பையில் மறைத்து வைத்து ஷாட்கன் வகை துப்பாக்கி ஒன்றை எடுத்து வந்தது தெரிய வந்தது. மேலும் கண்மூடித்தனமாக தனது வகுப்பறையில் இருந்த மாணவர்கள் மீது அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஐந்து பேரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிறுமியிடம் துப்பாக்கி வந்தது எப்படி என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ரஷ்யாவில் துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், கடந்த ஓராண்டுக்கு மேலாக உக்ரைனுடன் போர் நடைபெற்று வருவதால், அந்நாட்டை ஒட்டி உள்ள பகுதிகளில் தற்காப்பிற்காக பொதுமக்கள் துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பிரையன்ஸ்க் மாகாணத்திலும் துப்பாக்கி பயிற்சிகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது நடைபெற்றுள்ள இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.