17 பேர் உயிரிழப்பு, மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத அதி கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை பெருநகரில், செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, 17 பேர் உயிரிழந்தனர். இவர்களில் மின்சாரம் தாக்கி இருவர், மரம் முறிந்த விபத்தில் இருவர், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இருவர், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை பெருநகரில் 69 இடங்களில், சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என்று சென்னைப் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் நீரில் மூழ்கிய சுரங்கப் பாதைகள்: மழை நீர் தேங்கியதால் கணேசபுரம் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை, செம்பியம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, மவுண்ட்- தில்லைநகர் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை- அரங்கநாதன் சுரங்கப் பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, C.B. சாலை சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப் பாதை, கோயம்பேடு, புதுபாலம் சுரங்கப்பாதை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை, சூளைமேடு, லயோலா சுரங்கப்பாதை ஆகியவை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.
அடையாறு ஆற்றில் பாயும் 40,000 கனஅடி நீர் - வீடுகள் பாதிப்பு: சென்னை அடையாறு - ஆற்றில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாய்வதால், வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால், சைதாப்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அடையாறு ஆற்றின் கரையோர வீடுகள், கட்டிடங்கள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன.
இதனிடையே, அடையாறு கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து, சென்னை பெருநகர காவல்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.
நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை: கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் புதன்கிழமையும் விடுமுறை அறிவித்து தமிழ அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, புறநகரில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கம்: மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத அதி கனமழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், புறநகரிலுள்ள பல்வேறு பகுதிகள் இன்னும் சரிவர அணுகப்படவில்லை என்ற மக்களின் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தொலைத்தொடர்பு துண்டிப்பால் சென்னை மக்கள் பரிதவிப்பு: சென்னையின் பல இடங்களில் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவையில் பெரிதும் அலட்சியம் காட்டப்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.
இதனிடையே, சென்னை முழுவதும் செல்போன் நெட்வொர்க் பிரச்சினையால் மெட்ரோ பயணத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக செயல்படவில்லை. மெட்ரோ ரயில் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் அவற்றைப் பயன்படுத்தி பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், மக்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க சிரமப்பட்டனர்.
“2015-ல் செயற்கை வெள்ளம்; இது இயற்கை வெள்ளம்” - ஸ்டாலின் விளக்கம் கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் சென்னையில் வெள்ளத்தின் தாக்கம் இந்த முறை பெருமளவு குறைந்திருக்கிறது என்றும், 2015-ல் ஏற்பட்டது செயற்கை வெள்ளம்; இது இயற்கை வெள்ளம் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், “சென்னையில் வரலாறு காணாத வகையில் பெருமழை கொட்டித் தீர்த்துள்ளது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சுமார் ரூ.4000 கோடி மதிப்புள்ள வெள்ளநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டோம். அதனால்தான் கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் வெள்ளத்தின் தாக்கம் பெருமளவு குறைந்திருக்கிறது” என்று அவர் கூறினார்.
இதனிடையே, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் அனைத்தையும் நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றி இந்த இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம், என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை வெள்ளம் எதிரொலி: ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு: சென்னை வெள்ளம் எதிரொலியாக, டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் - ‘தமிழகத்துக்கு உடனடியாக ரூ.5,000 கோடி வழங்குக’ - மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். செவ்வாய்க்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
சென்னையில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள்: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. தாம்பரம், அண்ணா நகர் மேற்கு, வேளச்சேரி, அடையாறு கரையோர பகுதிகள்,
ராமாபுரம், அயனாவரம், ஊரப்பாக்கம், அம்பத்தூர், மதுரவாயல், ஆவடி, மாங்காடு, துரைப்பாக்கம் - பல்லாவரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெகுவாக பாதித்துள்ளன.
சென்னை வெள்ளம் | துரித நடவடிக்கை தேவை: மார்க்சிஸ்ட்: சென்னையில் மிக்ஜாம் புயல் - வரலாறு காணாத மழை காரணமாக வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இபிஎஸ் கேள்வி @ சென்னை வெள்ளம் - “முதல்வரும், திமுக அமைச்சரும், சுமார் ரூ.4,000 கோடியில் சென்னை மாநகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்திருக்கிறோம். மழை பெய்தால் சொட்டு தண்ணீரும் தேங்காது என வீர வசனம் பேசினார்கள். ஆனால், சென்னை மாநகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆக, ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்தும் ஏன் தண்ணீர் வடியவில்லை?” என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.