இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை,11 பேர் பலி, 12 நபர்களைக் காணவில்ல
04 Dec,2023
இந்தோனேசியா எரிமலை வெடிப்பால், மலையேற்றக் குழுவைச் சேர்ந்த 11 பேர் அதில் சிக்கி பலியாகி உள்ளனர். 49 பேர் காயமடைந்து சிகிச்சை பெற, காணாமல் போன 12 நபர்களைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
எரிமலைகளுக்குப் பெயர் போன தேசம் இந்தோனேசியா. உறங்கும் மற்றும் உயிரோடு இருக்கும் என நூற்றுக்கும் மேலான எரிமலைகள் இந்தோனேசியாவில் காணப்படுகின்றன. இந்த எரிமலைகளே, இந்தோனேசியாவின் சுற்றுலா ஈர்ப்புக்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது. இந்நிலையில் இந்தோனேசியாவின் உயிரோடு இருக்கும் மிகப்பெரும் எரிமலைகளில் ஒன்றான மவுண்ட் மராபி நேற்று திடீரென வெடிப்பு கண்டது.
சுமத்ரா தீவில் அமைந்துள்ள 2,891மீ உயரம் கொண்ட மவுண்ட் மராபி வெடித்து சிதற ஆரம்பித்ததில், வானில் சுமார் 3 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு எரிமலை சாம்பல்கள் பரவின. எரிமலை வாய்ப்பகுதி வரையே அதன் குழம்புகள் எட்டிப் பார்த்தன. இதனையடுத்து, மவுண்ட் மராபிக்கான சுற்றுலா ஈர்ப்பு அதிகமானது. அதிலும் ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு, ஏராளமான சாகசப் பிரியர்கள் மற்றும் மலையேற்றக் குழுவினர் குமுறும் எரிமலையை ரசிக்க அதனை நெருங்கினர்.
இதில் 80 பேர் பயணித்த மலையேற்றக் குழு ஒன்று எரிமலையை நெருக்கமாக தரிசிக்கும் ஆர்வக் கோளாறில் மரணத்தை நேரில் தரிசித்தது. எரிமலை வெடிப்பில் சிக்கி, 11 பேர் இறந்ததோடு, 49 பே படுகாயமடைந்தனர். உடனடியாக விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதே மலையேற்றக் குழுவை சேர்ந்த மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதனையடுத்து சுமத்ரா தீவில் வெடித்துச் சிதறி வரும் மவுண்ட் மராபி எரிமலைக்கான சாகசப் பயணம் தடை செய்யப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பின் இதர பாதிப்புகள் குறித்து அதிகாரிகளின் முழுமையான விசாரணைக்கு இந்தோனேசிய அரசு உத்தரவிட்டுள்ளது.