அமெரிக்க போர்க்கப்பல் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல்: செங்கடல் பகுதியில் பதற்றம்!
04 Dec,2023
மத்திய கிழக்குப் பகுதியில் செங்கடலில் சென்று கொண்டிருந்த அமெரிக்கப் போர்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கே இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் ஆரம்பித்து ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது. ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இடையில் சில நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டு பிறகு மீண்டும் தாக்குதல் நடந்து வருகிறது.
ஹமாஸை முற்றிலும் அழிப்பதே தங்கள் நோக்கம் என்று இஸ்ரேல் சொல்லியிருக்கும் நிலையில், அங்கே பதற்றம் நிலவி வருகிறது. இந்த சண்டை பிராந்திய போராக மாறவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று(டிச.3) செங்கடலில் சென்று கொண்டிருந்த அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போர்க் கப்பல் மட்டுமின்றி அப்பகுதியில் சென்ற பல்வேறு வணிகக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா பாதுகாப்புத் துறையான பென்டகன் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பென்டகன் தரப்பில், "யுஎஸ்எஸ் கார்னி மற்றும் செங்கடலில் உள்ள பல வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதை நாங்கள் அறிவோம். இதுகுறித்து கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது அது குறித்து அறிவிப்போம்.
செங்கடலில் சென்று கொண்டிருந்த கேரியர் கப்பல் மீது குறைந்தது இரண்டு டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. ஏமனின் சானா என்ற பகுதியில் இருந்து காலை 10 மணியளவில் இந்தத் தாக்குதல் தொடங்கியதாகவும் இது அடுத்த ஐந்து மணி நேரம் வரை நீடித்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இந்தத் தாக்குதல் எங்கிருந்து வந்தது என்று குறித்து உறுதி செய்ய முடியவில்லை என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.
இப்போது ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கடந்த காலங்களில் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதேபோல் காஸா பகுதியில் ஹமாஸ் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதை எதிர்த்து இஸ்ரேலைக் குறிவைத்தும் ஹவுதி குழு டிரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இது தொடர்பாக ஹவுதி தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கவும் அளிக்கப்படவில்லை.
அமெரிக்க போர்க்கப்பல் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலால் பெரும் போர் மூளுமோ என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.