இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள 4 நாள் போர் நிறுத்தம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் இதற்கான அறிவிப்பை கத்தார் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு கத்தார் நாடுதான் மத்தியஸ்தம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்துவந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இருதரப்பும் தாம் சிறைப் பிடித்த மக்களை கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து (நவம்பர் 27) விடுதலை செய்து வருகின்றனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் 50 பணயக் கைதிகளை விடுவிக்க, இஸ்ரேல் 150 பாலத்தீனக் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
இதுவரை, இஸ்ரேல் தனது சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 117 பாலத்தீனக் கைதிகளையும், ஹமாஸ் தாம் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்திருந்த 40 பேரையும் விடுவித்திருக்கின்றன.
இன்று (நவம்பர் 27) ஹமாஸ் 17 பணயக்கைதிகளை விடுவித்ததற்குப் பதிலாக, இஸ்ரேல் 39 பாலத்தீனக் கைதிகளை விடுவித்திருக்கிறது. இதன்படி, வெள்ளிக்கிழமையிலிருந்து விடுவிக்கப்பட்ட மொத்தக் கைதிகளின் எண்ணிக்கை 117 ஆகியிருக்கிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலிருக்கும் ராமல்லாவில் அவர்கள் விடுவிக்கப்பட்டதும் அங்கிருந்த மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றனர்.
விடுவிக்கப்பட்ட பாலத்தீனக் கைதிகள் அழைத்துவரப்பட்டப் பேருந்தைச் சுற்றிக் கூடிய மக்கள் ஆரவாரம் செய்தும், கொடிகளை அசைத்தும் அவர்களை வரவேற்றனர்.
ஹமாஸுடன் செய்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல், சிறையிலிருந்து விடுவிப்பதற்காக 300 பாலத்தீனக் கைதிகளின் பட்டியலைத் தயார் செய்திருக்கிறது, அதில் பெரும்பாலானவர்கள் பதின்பருவ ஆண்கள். அதன்படி பாலத்தீனர்களை விடுவித்து வருகிறது.
இஸ்ரேலால் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்ட முதல் பாலத்தீனக் கைதிகளில் ஒருவர், பெண் கைதியான சாரா அல்-சுவைஸா. இவர் ஒரு மாதம் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாகக் கூறினார்.
அவர், இஸ்ரேல் சிறையில் இருந்தது மிகவும் ‘அவமானகரமான’ அனுபவமாக இருந்தது என்றார். பாலத்தீனக் கைதிகள் ஒருவரை ஒருவர் அடையாளம் காணவோ, உதவி செய்து கொள்ளவோ முடியாதபடி வைக்கப்பட்டிருந்ததாகவும், சிலர் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கைதிகளின் மீது ‘பெப்பர் ஸ்ப்ரே’ எனப்படும் மிளகாய்ப் பொடி ஸ்ப்ரே அடிக்கப்பட்டது என்றார் அவர்.
மேலும், பாலத்தீனக் கைதிகளை இஸ்ரேல் அதிகாரிகள் இருட்டு அறைகளில் அடைத்து வைத்திருந்ததாகவும், அவர்கள் குளிரில் அவதிப்பட்டதாகவும் தெரிவித்தார்.
வீட்டுகாவலில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவன்
கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்ரேலிய குடியிருப்புப் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச முற்பட்டதாகக் கைதுசெய்யப்பட்ட 14 வயது சிறுவனான அப்துல்ரகுமான் அல்-ஸகல், வீட்டுக்காவலில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டார்.
அல்-ஸகல் தலையில் சுடப்பட்டும், உடலின் கீழ்ப்பகுதியில் அடுபட்டும், கிழக்கு ஜெருசலேமின் சில்வான் கிராமத்தில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் மருத்துவமனையில் இருந்ததனால், அவர் இல்லாமலே அவருக்கு எதிரான வழக்கு நடந்துகொண்டிருந்தது.
ஆனால், அவரது குடும்பத்தினரின் கூற்றுப்படி அந்தச் சிறுவன் ரொட்டி வாங்குவதற்காகக் கடைக்குச் சென்றிருந்தபோது இஸ்ரேலியப் படையினரால் சுடப்பட்டார்.
அவர் விடுவிக்கப்பட்டதன் அடையாளமாக, தனது காலில் மாட்டப்பட்டிருந்த ஒரு மின்னனு பிரேஸ்லெட்டைக் கழற்றினார்.
‘முழுமையான மகிழ்ச்சி இல்லை’
இஸ்ரேல் விடுவித்திருக்கும் மற்றொரு சிறார் கைதியான முகமது அல்-அன்வரின் தாய், தம்மால் முழுமையாக மகிழ்ச்சியடைய முடியவில்லை என்றார்.
“காஸாவில் இத்தனை மக்கள் கொல்லப்பட்டிருக்கும் போது எங்களால் முழுமையாக மகிழ்ச்சியாக இருக்க முடியாது,” என்று ஒரு காணொளியில் அவர் பேசினார்.
‘ஹமாஸ் விடுவித்த பெண் மோசமான நிலையில் உள்ளார்’
இதேபோல், ஹமாஸ் இஸ்ரேலியப் பணயக்கைதிகளை மிகவும் மோசமாக நடத்தியிருப்பதாக இஸ்ரேலியத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
ஹமாஸ் குழுவால் விடுவிக்கப்பட்ட 84 வயதான எல்மா அவ்ராம் என்ற பெண், ‘மருத்துவ ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக’ இஸ்ரேலிய மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
ஹமாஸ் இன்று விடுவித்த 17 பணயக்கைதிகளில் ஒருவரான அவ்ராம், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவ்ராமின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவரது உயிர் ஆபத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அவருக்கு அவசரச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறியிருக்கிறார்.
தாயுடன் ஒன்றிணைந்த மகள்கள்
பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்திருந்த 8 வயதான எலாவையும், 15 வயதான டாஃப்னாவையும் ஹமாஸ் இன்று விடுவித்தது.
அவர்களது தாய் மாயன் ஸின், இத்தனை நாட்கள் தனது மகள்களின் நிலையை எண்ணி பெரும் அச்சத்தில் இருந்ததாகவும், எதுவும் நிச்சயமில்லாமல் இருந்ததாகவும் கூறினார்.
“51 நாட்கள் நம்பிக்கையிலும் அவநம்பிக்கையிலும் மாறிமாறி இருந்தோம். இப்போது அவர்கள் திரும்பி வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால். அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப சிலகாலம் ஆகும்,” என்றார்.
மேலும், இன்னும் விடுவிக்கப்படாத பணயக்கைதிகளை நினைத்து வருந்துவதாகவும், அவர்கள் திரும்பி வரும்வரை என் இதயம் முழுமையடையாது,” என்றார்.
ஹமாஸ் பிடியில் பிறந்த நாளைக் கழித்த 4 வயது சிறுமி
ஹமாஸ் விடுவித்த பணயக்கைதிகளில் 4 வயதான அமெரிக்க-இஸ்ரேலியச் சிறுமி அவிகைல் இடானும் ஒருவர்.
அவர் கடத்தப்பட்டபோது அவருக்கு மூன்று வயதுதான் ஆகியிருந்தது. ஹமாஸின் பிடியிலிருந்தபோது அவருக்கு 4 வயதானது.
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி, தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தியபோது, இடானின் வீட்டில் புகுந்து அவரது பெற்றோரைக் கொலைசெய்துவிட்டு குழந்தையைக் கடத்திச் சென்றனர்.
இடானின் குடும்பம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நிம்மதியை விவரிக்க வார்த்தைகள் இல்லையென்று கூறியிருக்கின்றனர்.
இடான் விடுவிக்கப்பட்டதைப் பற்றிப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், குழந்தை அவிகைல், ‘கொடூரமான அதிர்ச்சியில்’ இருப்பதாகவும், அவள் அனுபவித்த துயரத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்றும் கூறினார்.