ஹமாஸ்-க்கு பெரும் பின்னடைவு முக்கிய தளபதி அகமது அல் கந்தோர் கொல்லப்பட்டார்!
27 Nov,2023
ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான அகமது அல் கந்தோர் மற்றும் 3 மூத்த தலைவர்கள் போரில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நவ.26 ஞாயிறு அன்று, அவரது மரணத்திற்கான காரணம், நாள் எதையும் குறிப்பிடாமல், அவர் கொல்லப்பட்டதை மட்டும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் மிக உயர்ந்த அதிகாரிகளின் தரவரிசையில் அகமது அல் கந்தோர் இடம்பெற்றிருந்தார். இதுவரை இஸ்ரேல் அவரை மூன்று முறை கொலை செய்ய முயற்சித்து தோற்றதாக வாஷிடனில் உள்ள அரசு சாரா வழக்கறிஞர்கள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த அக்.7 அன்று ஹமாஸ் அமைப்பு நடத்திய திடீர் தாக்குதலால் இந்தப் போர் துவங்கியது. 40 நாள்களுக்கு மேலாக நடந்த இந்தப் போரில் இஸ்ரேல் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்களை கொன்றுக் குவித்தது. நாலாயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பலியாகினர். கொல்லப்பட்டப் பல உயிர்களில் தங்கள் தளபதியும் அடங்குவார் என ஹமாஸ் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், பல நாடுகளின் கடும் அறிவுறுதலுக்குப் பிறகு ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான போர் தற்காலிகப் போர் நிறுத்தம் செய்யப்பட்டுக் கைதிகள் நாடு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.