.
காஸா மீதான இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பல வாரங்களாக எதிர்பார்க்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை அமல்படுத்தப்பட்டு இரண்டு நாட்கள் கடந்துவிட்டன.
ஹமாஸ் வெள்ளிக்கிழமை நான்கு தாய்லாந்து குடிமக்கள் உட்பட 24 பணயக் கைதிகளை விடுவித்தது. அவர்களில் 13 பேர் இஸ்ரேலிய குடிமக்கள். இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 39 பாலத்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு ஈடாக அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
போர் நிறுத்த உடன்படிக்கையின் கீழ், இந்த நான்கு நாட்களுக்கு தாக்குதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த இடைவெளியில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் இருநூறு டிரக்குகள், நான்கு எரிபொருள் லாரிகள் மற்றும் நான்கு டிரக்குகள் தினமும் காஸாவுக்குள் நுழைய வேண்டும்.
இந்தக் காலகட்டத்தில், இரு தரப்பினரும் வடக்கு மற்றும் தெற்கு காஸாவில் எந்தத் தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டார்கள் என்பதுடன் இஸ்ரேலும் காஸா மீது கண்காணிப்பு ட்ரோன்களை பறக்கவிடாது.
ஆனால், நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற 97 டிரக்குகளை வடக்கு காஸாவிற்கு செல்லவிடாமல் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியதாகவும், தெற்கு காஸா மீது ஆளில்லா விமானங்களைப் பறக்கவிட்டதாகவும் ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்துள்ளது.
.
இந்தப் போர் நிறுத்தம் ஹமாஸுக்கு ஒரு வியூக ரீதியிலான சாதகமாகவும் உள்ளது. இது பல வாரங்களாக நீடித்து வந்த கடுமையான தாக்குதலில் இருந்து மீண்டுவர ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு உதவும். ஏனெனில் போர் நடந்த காலகட்டத்தில் அது இஸ்ரேலிய தாக்குதலில் சிக்கி பல இழப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது.
ஹமாஸ் தனது கட்டளைச் சங்கிலி அமைப்பை மீண்டும் உறுதியாக நிறுவுவதற்கும், முன்னேறும் இஸ்ரேலிய ராணுவத்துக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இடங்களுக்குத் தனது போராளிகளை நிலைநிறுத்துவதற்கும் இந்த போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
எஞ்சியுள்ள பணயக் கைதிகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றும் வாய்ப்பையும் இந்தப் போர் நிறுத்தம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதும், இஸ்ரேலுக்கு அவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்பதும் முக்கிய விஷயங்களாகப் பார்க்கப்படுகின்றன.
சுருக்கமாகச் சொன்னால், இதிலிருந்து வேறு எந்தப் பலன்களும் அறிவிக்கப்படாவிட்டாலும், பணயக் கைதிகள் விடுதலை ஒப்பந்தம் ஹமாஸுக்கு கணிசமான வியூக ரீதியிலான மற்றும் உத்தி ரீதியிலான ஆதாயமாகும்.
பணயக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் விடுதலைக்கு இது ஒரு நல்ல செய்தி என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், அந்த பணயக் கைதிகளை விடுவிப்பது மிகவும் கடினமாகவும் பெரும் விலை கொடுக்கப்படும் விஷயமாகவும் மாறும் என்பதே கசப்பான உண்மை.
.
இந்த போர் இடைநிறுத்தம் தற்போதைய பாதிப்பில் இருந்து இரு தரப்பினருக்கும் நிவாரணம் அளித்துள்ளது. ஆனால் இது மிகவும் மோசமான நெருக்கடியின் முடிவு அல்லது அந்த முடிவின் தொடக்கம் என்று பொருள்படாது.
அதே நேரம் இந்தத் தாக்குதல் நிறுத்தம் ஹமாஸ் அமைப்புக்கு பல வழிகளில் பயனளிக்கும்.
இந்த நான்கு நாட்களில் ஹமாஸால் பணயக் கைதிகளாக இருந்த டஜன் கணக்கான முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்பட்டிருப்பது இஸ்ரேலியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இதன் பொருள் ஹமாஸ் 150க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை இன்னும் வைத்திருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான பணயக் கைதிகளை வைத்திருப்பதைவிட இது அவர்களுக்கு அதிக லாபம் தரும் ஒப்பந்தமாக இருக்கலாம்.
ஏறத்தாழ 240 பணயக் கைதிகளை வைத்திருப்பது எந்தவொரு அமைப்புக்கும் பெரும் சுமையாகும். இந்த பணயக் கைதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும், தேவைப்பட்டால், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
.
.
அவர்களில் சிலர் வயதானவர்களாக இருக்கலாம், நோய்வாய்ப்பட்டவர்களாக இருக்கலாம், அல்லது ஏதேனும் சிறப்பு சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருந்தால், அது நிலைமையை மேலும் சிக்கலாக்கும்.
சிறப்பு கவனிப்பு தேவைப்படுபவர்களை "விடுதலை" செய்வதன் மூலம், ஹமாஸ் தாராள மனப்பான்மையைக் காட்டவில்லை. மாறாக மற்ற இடங்களில் தேவைப்படும் வளங்களை முதன்மையாகப் பெறுகிறது என்பதே உண்மை.
தாய்லாந்து மற்றும் நேபாளத்தை சேர்ந்த சுமார் இரண்டு டஜன் தொழிலாளர்களின் விஷயத்தில் இது குறிப்பாக மிகப்பெரிய உண்மையாக இருக்கிறது. அவர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்வது ஹமாஸுக்கு எந்த வியூகரீதியிலான பயன்களையும் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் இஸ்ரேலியரோ அல்லது யூதரோ அல்ல.
மற்றொரு காரணம் என்னவென்றால், எஞ்சியிருக்கும் பணயக் கைதிகளை வைத்திருப்பதற்கு அவர்களுக்கு ஒரு 'எளிதான வாதம்' கிடைக்கும். ஏனென்றால் அவர்களில் பெரும்பாலோர் இஸ்ரேலிய வீரர்கள் அல்லது போருக்குப் பயன்படும் வயதுடையவர்கள்.
.
எகிப்துடனான ரஃபா கடவுப் பாதையில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகள் வரிசையாக நின்றுகொண்டிருந்தன.
மேலும் இது கைதிகளைப் பரிமாறிக்கொள்ள பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும்.
கடந்த காலத்தில் நடந்தது போல், ஒரு சில இஸ்ரேலிய வீரர்களுக்கு ஈடாக நூற்றுக்கணக்கான பாலத்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டபோது, ஒரு சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் விடுவிக்கப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.
இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஹமாஸ் உறுப்பினர்களை விடுவிக்க அந்நாட்டு அரசை ஹமாஸ் வலியுறுத்தும்.
போர் நிறுத்தத்தின் இரண்டாவது நாளில் ஜெருசலேமில் இருந்த பிபிசியின் யோலண்டே நெல் அளித்த தகவல்களின்படி, எகிப்தின் ரஃபா கடவுப் பாதையில் இருந்து காஸாவுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல ட்ரக்குகள் மற்றும் லாரிகள் வரிசையாக அதிகாலையில் இருந்து காத்திருந்தன.
நான்கு டேங்கர் டீசல் மற்றும் எல்பிஜி கேஸ் ஏற்றப்பட்ட நான்கு டிரக்குகளை நிவாரணப் பொருட்களுடன் காஸாவுக்குள் நுழைய இஸ்ரேல் அனுமதித்துள்ளது.
நிவாரணப் பொருட்களை ஏற்றிய சுமார் 200 டிரக்குகள் சனிக்கிழமை காஸாவுக்குள் நுழைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
.
காஸாவின் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பயணம் மேற்கொண்டவர்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளனர்.
போர் தொடங்கிய பின்னர் அக்டோபர் 21ஆம் தேதி காஸாவுக்கு உதவிப் பொருட்கள் வரத் தொடங்கியதில் இருந்து முதன் முதலாக இவ்வளவு பெரிய அளவில் நிவாரணப் பொருட்கள் வந்துள்ளன என வெள்ளிக்கிழமை, ஐக்கிய நாடுகள் சபை கூறியது.
பாலத்தீன அகதிகளுக்கான அமைப்பான UNRWA-வின் செய்தித் தொடர்பாளர் ஜூலியட் டூமாவின் கருத்துப்படி, இந்த நேரத்தில் அனைத்து வகையான உதவிகளும் மிக முக்கியமாகத் தேவைப்படுகின்றன.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள், ரேஷன், மருந்துகள், குடிநீர். தூய்மைக்குத் தேவையான சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பெட்டி போன்றவை மிகவும் முக்கியமானவை,” என்றார்.
காஸாவில் உள்ள பெரும்பாலான தங்குமிடங்கள் நிரம்பி வழிகின்றன. சுமார் 10 லட்சம் இடம்பெயர்ந்த மக்கள் அங்குள்ள பள்ளிகளிலும் மற்ற இடங்களிலும் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர் என்று ஐ.நா.வின் பாலத்தீன அகதிகளுக்காக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பு கூறுகிறது.
காஸாவில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகக் கூறினர்.
பெரும்பாலானோர் குளிக்கவும், துணி துவைக்கவும்கூட முடியாமல் தவிக்கின்றனர். போர்நிறுத்தம் தொடங்கியதில் இருந்து, பாலத்தீனர்கள், தங்களுடைய அழிக்கப்பட்ட வீடுகளுக்குத் திரும்புவது, குப்பைகளில் பயனுள்ள எதையும் தேடுவது போன்ற அவநம்பிக்கையான காட்சிகளை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
.
இது போன்ற ஒரு சூழ்நிலையில், தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பின் என்ன நடக்கும் என்பது பெரும் குழப்பத்தை அளிக்கும் விஷயமாகவே நீடிக்கிறது.
இஸ்ரேல் மீண்டும் போரைத் தொடங்கினாலோ, காஸாவின் தெற்கு பகுதியை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தினாலோ, முன்பைவிட இழப்புகள் பேரழிவுகரமாக அதிகரிக்கும் என்ற அச்சமும் சர்வதேச அளவில் நீடித்து வருகிறது.
காஸாவின் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகர்ந்த பொதுமக்கள், வரவிருக்கும் குளிர்காலத்தை எப்படித் தாக்குப்பிடிப்பார்கள் என்பதும், கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் ஓரிடத்தில் குவியும்போது அங்கே ஏற்படவிருக்கும் புதிய தேவைகள் மற்றும் நெருக்கடிகளைச் சமாளிப்பது பெரும் சவாலாக மாறும்.
மறுபுறம், இஸ்ரேல் மீண்டும் தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால், அதற்கு சர்வதேச சமூகமும், அது இஸ்ரேலின் நட்பு நாடாகவே இருந்தாலும் அந்நாட்டிலிருந்து பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே தொடர்கிறது.
இருப்பினும், சர்வதேச அழுத்தங்களுக்கு பெஞ்சமின் நெதன்யாகு அடிபணிய மாட்டார் என்றும், அதை இஸ்ரேலியர்களும் விரும்புவார்கள் என்றும் நம்பப்படுகிறது.