பாகிஸ்தானில் , பயங்கரவாத தாக்குதல்: 9 பேர் பலி!
23 Nov,2023
.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதன் மத்தியில், பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக அங்கு 9 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார சுணக்கம், அரசியல் ஸ்திரமின்மை ஆகியவற்றோடு பயங்கரவாத தாக்குதல்களும், பாகிஸ்தானின் நடப்பு அச்சுறுத்தல்களாக எழுந்துள்ளன. பாக் ராணுவம் மற்றும் உளவு அமைப்புகளின் ஆதரவோடு, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளின் அமைதியைக் கெடுக்கும் ஆயுதக் குழுக்கள் பாகிஸ்தானில் அங்கே பயிற்சி பெற்றது ஒரு காலம். தற்போது நிலைமை தலைகீழாகி இருக்கிறது.
.
பாகிஸ்தானின் அடிப்படைவாத அமைப்புகள், அந்நாட்டின் ராணுவம் மற்றும் அரசுக்கு எதிராக, தொடர்ச்சியான பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றி வருகின்றன. அந்த பயங்கரவாதிகள் பலரும், ஆப்கனிலிருந்து அகதிகளாக குடியேறியவர்கள் மத்தியில் பதுங்கியிருப்பதாக பாகிஸ்தான் கண்டுகொண்டது. இதனையடுத்து ஆவணமின்றி பாகிஸ்தானில் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.
ஆனால் பாகிஸ்தானின் வெளியேற்றல் நடவடிக்கையில் சிக்காது மறைந்திருக்கும் பயங்கரவாதிகள், தங்களது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றனர். அவற்றில் தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் உள்ளிட்டவை பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் அப்பாவி மக்களும் சிக்கி பலியாவது அதிகரித்து வருகிறது.
.
நேற்றைய தினம், வடமேற்கு பாகிஸ்தானில் பஜௌர், வஸிரிஸ்தான் பகுதிகளில் அரங்கேறிய குண்டுவெடிப்பு சம்பவங்களில் 2 ராணுவத்தினர் உட்பட 9 பேர் பலியாகி உள்ளன. ஏராளமானோர் காயமடைந்தனர்.
ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதில், 2 வீரர்கள் கொல்லப்பட்டதை பாக் ராணுவம் உறுதி செய்துள்ளது. வானா பிராந்தியத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு ஒன்றில், 4 பழங்குடியினர் கொல்லப்பட்டனர். மேலும் பஜௌர் பகுதியில் நடைபெற்ற மேலும் 2 குண்டுவெடிப்புகளில் 3 பேர் தனியாக கொல்லப்பட்டனர்.