கடலில் விழுந்த ராணுவ விமானம்: ஹவாய் அருகே அதிர்ச்சி!
21 Nov,2023
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் ராணுவ விமானம் கடலில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹவாய் மாகாணத்தின் தீவுகளில் அமெரிக்க ராணுவத்தின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்குள்ள விமான நிலையத்தில், 9 ராணுவ வீரர்களுடன், பி8 பொஸைடான் ரக விமானம் ஒன்று தரையிறங்க முயற்சித்தது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகி, கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும், உடனடியாக மீட்புப்படையினர் விபத்து நேர்ந்த இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அதற்குள், விமானத்தில் இருந்த 9 பேரும் கடலில் நீந்தி பத்திரமாக கரையேறினர். கடற்கரையின் அருகிலேயே விமானம் விழுந்ததால் கடலில் மூழ்கவில்லை. இந்த விமானம் அதிநவீன போயிங் 737 வகைக்கு ஈடானதாகும். விபத்து குறித்த தகவல் அறிந்ததும், ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமானி, விமானத்தை தரையிறக்க வேண்டிய இடத்தை தாண்டி ஓடுதளத்தில் இறக்கியதே இந்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் கடும் பனிமூட்டம் நிலவி வந்ததால் ஓடுபாதை தெரியாமல் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.