விமானத் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல்: 15 பாலஸ்தீனியர்கள் பலி!
19 Nov,2023
காஸா பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில், 1,200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து, காஸா பகுதியில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல்களில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மறுத்துவருவதால், தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதாக இஸ்ரேல் கூறி வருகிறது. ஏற்கெனவே ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வந்த இஸ்ரேல் தற்போது விமானப்படை மற்றும் ராணுவத்தை ஒருங்கிணைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் விமானப்படையினர் நுசிராத் மற்றும் தெற்கு கான்யூனிஸ் நகரில் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாலஸ்தீன செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 4 மாடி கட்டிடம் சேதமடைந்துள்ளதாகவும், 12 பேர் அங்கு உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதே போல் மேற்கு கரைப் பகுதியிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்கள் நடத்தி வருவதாக பாலஸ்தீன அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நேற்று அல்-ஷிபா மருத்துவமனையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளியேறியதாகவும், இஸ்ரேல் ராணுவத்தின் அறிவிப்பை அடுத்தே அனைவரும் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தகவலை மறுத்துள்ள இஸ்ரேல் ராணுவம், மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.