ஹமாஸ் கடத்திக் கொன்ற 19 வயது படை வீராங்கனையின் உடல் மீட்பு: இஸ்ரேல் தகவல்
18 Nov,2023
இஸ்ரேலிய படை வீராங்கனை
டெல் அவில்: அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட இஸ்ரேலிய படையைச் சேர்ந்த 19 வயது பெண்ணின் உடல், காசா பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படை இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், "19 வயதான நோவா மார்சியானோ என்ற பெண் இஸ்ரேலிய படை வீரர் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். காசாவில் உள்ள ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருப்போம்” எனத் தெரிவிதுள்ளது.
இதனிடையே, ஹமாஸ் - இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 18 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெனரேட்டர்களுக்கான எரிபொருள் பற்றாக்குறையாக இருப்பதாக், காசாவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மூன்றாவது நாளாக அல்-ஷிஃபா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் "ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்கள் மரண ஆபத்தில் உள்ளனர்" என்று காசா சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரஃப் அல்-குத்ரா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியப் படைகள் வெஸ்ட் பேங்கில் உள்ள 47 பாலஸ்தீனர்களை இரவோடு இரவாக கைது செய்ததாக கைதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) காசாவில் பரவி வரும் நோய் குறித்து தனது கவலையை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் பலர் நெரிசலான இடங்களில் தங்கியிருக்கின்றனர். இந்த இக்கட்டான சூழல் போதிய உணவு மற்றும் சுத்தமான நீர் கிடைக்காமல் வாழ வழிவகை செய்துள்ளது. 70,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் 44,000-க்கும் அதிகமான மக்கள் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக பதிவேடுகள் குறிப்பிடுகின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் அமைந்துள்ள இபின் சினா மருத்துவமனையில் இஸ்ரேலியப் படைகள் ஆம்புலன்ஸ்களைத் தடுத்துள்ளதாக பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இடைவிடாமல் காசா மீது குண்டுவீசி வருகிறது. இதுவரை 12,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர், இதில் 4,700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், இஸ்ரேலில் 1200-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.