மியான்மர் ராணுவம் நடத்திய தாக்குதல் - 8 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி!
18 Nov,2023
மியான்மரின் மேற்கு பிராந்தியத்தில் அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளார்.
கிளர்ச்சியாளர் குழுவினரின் குடியிருப்புகளை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 8 குழந்தைகள் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. ராணுவ ஆட்சி எதிர்ப்பில் ஷின் மாகாணத்தில் உள்ள குழுவினருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
மியான்மரில் 2021 பிப்ரவரியில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, அங்கு ராணுவத்துக்கு எதிரான போராட்டங்கள் நடக்கின்றன. ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் குழுக்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே, கடந்த சில நாட்களாக மோதல் வலுத்து வருகிறது. நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான மிசோரமை ஒட்டியுள்ள, மியான்மரின் சின் மாகாணத்தில் உள்ள கிராமங்களில், இரு தரப்புக்கும் பயங்கர சண்டை நடக்கிறது. இதில், மியான்மர் ராணுவத்துக்கு சொந்தமான இரண்டு தளங்களை, கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றியது. இதையடுத்து, மியான்மரைச் சேர்ந்த 45 ராணுவ வீரர்கள், சமீபத்தில் மிசோரமில் தஞ்சம் அடைந்தனர்.
இவர்களை அந்நாட்டுக்கே நம் நாட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.இந்நிலையில், மியான்மரைச் சேர்ந்த மேலும் 29 ராணுவ வீரர்கள், மிசோரமில் நேற்று முன்தினம் தஞ்சமடைந்தனர்.இவர்கள், இந்தியா - மியான்மர் எல்லையான, தியாவ் நதிக்கு அருகே உள்ள, சம்பாய் மாவட்டத்தில் காவல் துறை அதிகாரிகளை அணுகி தஞ்சம் அடைந்தனர். இவர்களை மீண்டும் அந்நாட்டுக்கே அனுப்பும் பணியில் நம் நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மியான்மரில் சண்டை காரணமாக அங்குள்ள மக்கள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர்,சர்வதேச எல்லைவழியாக, நம் நாட்டுக்குள் நுழைவதால், சண்டையை நிறுத்தும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.