239 பிணைய கைதிகளை மீட்பதற்காக அல்-ஷிபா மருத்துவமனைக்குள் அதிரடியாக நுழைந்தது .
15 Nov,2023
காசா: காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள 239 பிணைய கைதிகளை மீட்கும் நடவடிக்கையாக அல்-ஷிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக நுழைந்தது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது நடத்திய ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதலை தொடர்ந்து கடந்த 40 நாட்களாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் தரைவழியாகவும், வான் வழியாகவும் ஹமாஸ் தீவிரவாதிகளை வீழ்த்தி வருகிறது. இதற்கிடையே 239 பேரை காசா பகுதிக்குள் ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இதனால் இஸ்ரேல் ராணுவம் காசாவின் வடபகுதியில் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. சுமார் 15 லட்சம் பேர் அங்கிருந்து இடம் பெயர்ந்து காசாவின் தென் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
ஹமாஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்களில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வரும்நிலையில், காசாவின் மருத்துவமனைகளில் பதுங்கியிருந்த ஹமாஸ் தீவிரவாதிகளையும் ராணுவத்தினர் வேட்டையாடி வருகின்றனர். ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த நாடாளுமன்ற கட்டிடத்தையும், இஸ்ரேல் ராணுவத்தினர் கைப்பற்றி உள்ளே புகுந்தனர். காசாவின் வடபகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து முக்கிய பகுதிகளும் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. இந்த நிலையில் பிணைய கைதிகள் அடைத்து வைத்திருப்பதாக கூறப்படும் அல்-ஷிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக நுழைந்தது.
.
அவர்களை எதிர்த்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினரை சுட்டுத் தள்ளினர். மருத்துவமனையில் குறிப்பிட்ட பகுதியில் புகுந்துள்ள இஸ்ரேல் படைகள், துல்லிய தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இஸ்ரேல் படைகளில் மருத்துவக் குழுக்கள் மற்றும் அரபு மொழி பேசுபவர்கள் உள்ளதால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருப்பவர்களை அடையாளம் கண்டு மீட்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இதுகுறித்து காசாவின் சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘இன்று அதிகாலை அல் ஷிஃபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்தது. அவர்கள் ஹமாசுக்கு எதிராக தாக்குதல் நடத்தலாம்’ என்றார்.
மேலும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், ‘ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பினர் காசா மருத்துவமனைகளுக்குள் ஆயுதங்களை குவித்து வைத்துள்ளனர். அங்கு பிணையக்கைதிகளை வைத்திருப்பதால், அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. மருத்துவமனைகளின் அடிப்பகுதியில் சுரங்கப்பாதைகள் இருப்பதால், அங்கும் இஸ்ரேல் ராணுவம் நுழைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது’ என்றார்.