1,000 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஹமாஸின் முக்கிய தளபதி அகமது சியாம் கொல்லப்பட்டார்
14 Nov,2023
ஜெருசலேம்: ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியான அகமது சியாம் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை (ஐடிஎஃப்) அறிவித்துள்ளது. இவர், 1,000 பேரைபிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு படை எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:
இஸ்ரேல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் அமைப்பின் முக்கிய மூத்த தளபதிகளில் ஒருவரான அகமது சியாம் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர், ராண்டிசி மருத்துவமனையில் நோயாளிகள் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக சிறைப்பிடித்திருந்தார். காசா மக்கள் தெற்கு நோக்கி வெளியேற விடாமல் தடுத்ததில் அகமது சியாமுக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும், சுரங்கப் பாதையில் பயங்கரமான ஆயுதங்களையும் அவர் மறைத்து வைத்திருந்தார்.
ஹமாஸின் நாசர் ரத்வான் கம்பெனி படைப்பிரிவின் தளபதியாக செயல்பட்டு வந்தவர் அகமது சியாம். காசாவில் பொதுமக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தி வந்தஅகமது சியாமின் ரகசிய இருப்பிடம்குறித்து ஷின் பெட் மற்றும் ராணுவபுலனாய்வு இயக்குநரகம் அளித்தஉளவு தகவல்களின் அடிப்படையில் கிவாடி பிரிகேட் படையினரின் வழிகாட்டுதலின் பேரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு ஐடிஎஃப் தெரிவித்துள்ளது.
ஆனால், இஸ்ரேல் பாதுகாப்பு படைஅகமது சியாம் மீது தெரிவித்த குற்றச்சாட்டுக ளுக்கு ஹமாஸ் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி ஹமாஸ்படைகள் திடீரென இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி 1,000-க்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்றது.
இதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உள்ளிட்ட 11,000 பாலஸ்தீனர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித் துள்ளது. இதில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதிகளாக விளங்கிய அலி காதி, முயதாஸ் ஈத், ஜாகாரியா அபு மாமர், ஜோத் அபு ஷ்மலா, பெலால் அல்காத்ரா, மெராட் அபு மெராட் உள்ளிட்டவர்களும் அடங்குவர்.