இந்திய எல்லையருகே மியான்மர் விமானப்படை தாக்குதல் - . 2 ஆயிரம் அகதிகள்!
14 Nov,2023
,
.
மிசோரம் சட்டசபை தேர்தல் முடிவடைந்த சில நாட்களிலேயே மியான்மர் அகதிகள் 2,000 பேர் தஞ்சமடைந்திருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மிசோரம் மாநில மக்களும் மணிப்பூரின் குக்கி, மியான்மர் எல்லை அருகே வசிக்கும் மக்களும் தொப்புள் கொடி உறவுகள். மியான்மரில் ராணுவ ஆட்சி அமைந்தது முதலே இந்திய எல்லை அருகே உள்ள பகுதிகளில் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி வருகிறது மியான்மர் விமானப் படை. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் மிசோரம், மணிப்பூர் எல்லை கிராமங்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
மியான்மரில் இருந்து அகதிகளாக நுழையும் பொதுமக்களுக்கு மிசோரம் அரசு அடைக்கலம் தரக் கூடாது; பயங்கரவாதிகளும் ஊடுருவுகின்றனர் என மத்திய பாஜக அரசு அனுமதி மறுத்தது. ஆனால் எங்கள் தொப்புள் கொடி உறவுகளை நாங்கள்தான் பாதுகாப்போம் என மத்திய அரசுக்கு எதிராக மிசோரம் மாநில அரசு அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது.
இந்த பின்னணியில் அண்மையில் மிசோரம் சட்டசபை தேர்தல் வன்முறைகளின்றி அமைதியாக முடிவடைந்தது. நவம்பர் 7-ந் தேதி மிசோரம் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. டிசம்பர் 3-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் இந்திய எல்லை பகுதி கிராமங்களில் மியான்மர் விமானப் படையினர் திடீரென சரமாரி தாக்குதல்களை மேற்கொண்டனர். மியான்மர் ராணுவ அரசுக்கு எதிரான பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மியான்மர் ராணுவம் தெரிவிக்கிறது.
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து மியான்மர் எல்லைகளில் இருந்து 2,000க்கும் அதிகமான பொதுமக்கள் மிசோரம் மாநிலத்துக்குள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த அகதிகளை மிசோரம் மாநில அரசு முகாம்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகளை வழங்கியிருக்கிறது. இனி வரும் நாட்களிலும் மியான்மர் அகதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிற அச்சம் உருவாகி உள்ளது.