காசா மருத்துவமனையை சுற்றி வளைத்த இஸ்ரேல்? – ஜோ பைடன் திடீர் கோரிக்கை!
14 Nov,2023
காசா மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்துள்ள நிலையில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கடந்த மாதம் முதலாக பாலஸ்தீனிய ஆதரவு ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் வான்வழி மற்றும் தரைவழியாக ஹமாஸ் அமைப்பினர் அதிகம் உள்ள காசா பகுதியை தாக்கி வருகின்றனர். இதில் பொதுமக்கள் உள்ள பகுதிகளிலும் குண்டுகள் வீசப்பட்டதால் பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு உலக நாடுகள் பல கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பினர் மக்கள் பின்னால் ஒளிந்து கொள்வதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில் இஸ்ரேலின் தரைவழி ராணுவப்படை காசாவிற்குள் ஊடுறுவி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் காசாவின் பிரதான மருத்துவமனை ஒன்றை சுற்றி வளைத்துள்ளது.
அந்த மருத்துவமனையில் ஏராளமான மக்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனையை தாக்க கூடாது என இஸ்ரேலை பலரும் கேட்டு வருகிறார்கள். ஆனால் இஸ்ரேலோ ஹமாஸ் அமைப்பினர் மருத்துவமனைக்குள் மறைந்து தாக்குவதாக குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் காசாவின் மருத்துவமனையை தாக்க வேண்டாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இஸ்ரேல் போரால் மருத்துவமனை எரிபொருள் வசதிகள் தீர்ந்துவிட்டதால் இன்குபெடரில் வைக்கப்பட்டிருந்த 6 பிஞ்சு குழந்தைகள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.