எரிமலை வெடிப்பு அச்சுறுத்தல்: ஐஸ்லாந்து நாட்டில் அவசர நிலை
11 Nov,2023
ரெய்காவிக்: தொடர்ச்சியான நில அதிர்வுகளின் விளைவாக எரிமலை வெடிப்பு அச்சுறுத்தல் அதிகரித்ததன் காரணமாக, ஐஸ்லாந்து நாட்டில் அவசர நிலை பிரகடப்படுத்தப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்து (Iceland) நாட்டில், கடந்த 14 மணி நேரத்தில் 800 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டிருப்பதால் அங்கு எரிமலை வெடிப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு, அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில்தான் 14 மணி நேரத்தில் தொடர்ந்து சுமார் 800 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு கிரண்டாவிக் (Grindavik) பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இதனால், கிரிண்டாவிக் அருகே உள்ள பிரபல சுற்றுலா தலமான ப்ளூ லகூன் மூடப்பட்டுள்ளது.
கிரிண்டாவிக் நகரில் இருந்து வடக்கு மற்றும் தெற்கு நோக்கி செல்லும் சாலைகள் நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ளன. இதன் காரணமாக போலீஸார் சாலைகளை மூடியுள்ளனர். இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்துள்ளனர். இந்த தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக மிகப் பெரிய எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து, அவசர நிலையை ஐஸ்லாந்து அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
ஐஸ்லாந்து நாட்டின் அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில், இந்த நில அதிர்வுகளால் நாட்டில் எரிமலை வெடிப்புகளும் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளனர். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஐஸ்லாந்தில் 33 எரிமலைகள் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஐஸ்லாந்தில் இதுவரை சுமார் 24,000-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 2010-இல் ஐஸ்லாந்தின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட மிகப் பெரிய எரிமலை வெடிப்பு காரணமாக உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதும், இதையடுத்து ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தவித்ததும் நினைவுகூரத்தக்கது.