இஸ்ரேல் தாக்குதலில் சரிந்த காசா கட்டிட இடிபாடுகளில் காயமடைந்தவர்களை மீட்கும் மக்கள்.
டெல் அவில்: கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய போர் இன்றும் நீடித்து வரும் நிலையில், காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே இரவில் 200 பேர் பலியாகியுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
காசாவின் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் கடந்த அக்.7-ஆம் தேதி தொடங்கிய போர், 30 நாட்களை கடந்தும் நீடித்து வருகிறது. வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம், காசாவுக்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. காசாவில் உள்ள தங்குமிடம், மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றை குறிவைத்து தாக்கி வருகிறது இஸ்ரேல் ராணுவம்.
போர் கொடூரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள மக்களின் நிலை மோசமடைந்து வருகிறது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்குதான் எங்களுடைய முழு ஆதரவு என அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்து வரும்நிலையில், அரபு மக்களின் கொந்தளிப்பும் அதிகரித்து வருகிறது. சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோர் இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஹமாஸ் ஒரு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே இரவில் 200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர். இறப்பு எண்ணிக்கை காசா பகுதியின் வடக்குப் பகுதியை மட்டுமே உள்ளடக்கியது எனத் தெரிவித்துள்ளது.
இந்தப் போர் குறித்து போப் பிரான்சிஸ் வெளியிட்ட கருத்தில், ”பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் பலர் உயிரிழக்கும் மோசமான நிலையைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். கடவுளின் பெயரால் நிறுத்துங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களைக் கொல்ல இஸ்ரேலை அமெரிக்கா ஊக்குவிக்கிறது என ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி குற்றம்சாட்டியுள்ளார்.
48 மணி நேரம் தான்! - இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி செய்தியாளர்களை சந்தித்தபோது, “காசாவில் வடக்கு, தெற்கு எல்லாம் இப்போது இல்லை. மொத்த காசாவும் இரண்டாகப் பிரிந்துள்ளது. நாங்கள் காசாவை சூழ்ந்துவிட்டோம். இன்னும் 48 மணி நேரம்தான், காசா நகருக்குள் இஸ்ரேலியப் படைகள் நுழைந்துவிடும்” என்று எச்சரித்துள்ளார்.
காசாவில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக தொலைத்தொடர்பு முடக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் - இஸ்ரேல் மோதலில் இதுவரை 9,700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 4000-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். இஸ்ரேலில் 1,400 பேர் பலியாகியுள்ளனர். 242 பேர் ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.