ஆம்புலன்ஸ்களை. தாக்கிய இஸ்ரேல் - 15 பேர் மரணம்; 60 பேர் காயம்
04 Nov,2023
காசாவில் ஆம்புலன்ஸ்களையும் தாக்கிய இஸ்ரேல் - 15 பேர் மரணம்; 60 பேர் காயம்
.
இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனையின் முன்புறமிருந்த அவசர ஊர்திகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 60 பேர் காயமடைந்துள்ளனர்.
அல்-ஷிபா மருத்துவமனையிலிருந்து அவசர ஊர்திகளின் மூலமாக மோசமான நிலையில் உள்ள நோயாளிகள், ராபா எல்லை வழியாக எகிப்துக்கு அழைத்து செல்லப்படவிருந்ததாகக் காசா அமைச்சகம் தெரிவித்துள்ளது. "ஒட்டுமொத்த உலகத்துக்கும் நாங்கள் சொல்ல விரும்புகிறோம். இவை மருத்துவ அவசர ஊர்திகள் தான்" என்று பேசியுள்ளார் காசாவின் சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா.
மருத்துவ அவசர ஊர்திகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தைச் சுற்றி ஏராளமான பொதுமக்கள் இருந்ததாகவும் தெரிகிறது. இஸ்ரேல் ராணுவம், தங்களின் போர் விமானம் இந்த தாக்குதலை நடத்தியதை உறுதி செய்துள்ளது.
போர் தீவிரமடைந்துள்ள பகுதியில் இந்த வாகனங்களை ஹமாஸ் பயன்படுத்தியதைக் கண்டறிந்ததாகவும், அதனாலே தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், ஹமாஸ் தங்களின் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை இடம் மாற்ற அவசர ஊர்திகளைப் பயன்படுத்துவதாகவும், இந்தத் தாக்குதலில் ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.
காசாவின் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அல்-ஷிபா மருத்துவமனை தற்போது கூட்ட நெரிசலால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. காசாவின் பெரும்பாலான மருத்துவமனைகள் முடங்கியுள்ள நிலையில் இந்த மருத்துவமனையும் போதிய மருத்துவ வசதி வழங்க இயலாது திணறி வருகிறது.
''எரிபொருள் பற்றாக்குறையால் காசாவில் காயமுற்றவர்கள் மற்றும் நோயாளிகளின் உயிருக்கு உடனடி அபாயம் ஏற்படும்" என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 9,200. மேலும், காயமுற்றவர்கள் எண்ணிக்கை 23,500 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தற்காலிக போர் நிறுத்தம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.