ஈரான் நாட்டில் 7 மாதங்களில் 419 பேருக்கு மரணதண்டனை - ஐநாவின் அதிர்ச்சி தகவல்!
02 Nov,2023
ஈரான் நாட்டில் கடந்த 7 மாதங்களில் 419 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் அபாயகரமான விகிதத்தில் மரண தண்டனைகளை நிறைவேற்றுவதாக குற்றம் சாட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் 419 பேரை அந்த நாடு தூக்கிலிட்டு கொன்றுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது 30% அதிகம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 2022 செப்டம்பரில் முறைப்படி ஹிஜாப் அணியவில்லை என்று கூறி அறநெறி காவலர்களால் கைது செய்யப்பட்ட 22 வயது மஹ்ஸா அமினி கொலையை தொடர்ந்து ஏற்பட்ட போராட்டம் தொடர்பாக ஈரானில் இதுவரை 7 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார். இந்த 7 வழக்குகளிலும் நீதித்துறையின் நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் நியாயமாக நடைபெறவில்லை என்று குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
ஈரானின் நீதித்துறை நடவடிக்கைகள், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்றும், உரிய நடைமுறைள் பின்பற்றப்படவில்லை என்றும் குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் சட்ட அணுகல் நிராகரிக்கப்பட்டதாகவும், சித்ரவதை காரணமாக ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருக்கலாம் என்றும் ஐநா அறிக்கை கூறுகிறது.
கடந்த 7 மாதங்களில் தூக்கிலிடப்பட்ட 239 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டு இதே காலத்தோடு ஒப்பிடும்போது 30% அதிகமாகும். மாஷா அமினி மரணத்தை அடுத்து, செப்டம்பர் 17, 2022 முதல் பிப்ரவரி 8, 2023 வரையிலான காலகட்டத்தில் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக 20,000 பேர் கைது செய்யப்பட்டதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் தகவல் திரட்டி உள்ளதாக ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் துணைத் தளபதியின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்டவர்களின் சராசரி வயது 15 என மதிப்பிடப்பட்டிருப்பதால், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகளாக இருக்கலாம் என குட்டரெஸ் அச்சம் தெரிவித்துள்ளார். போராட்டங்களின் போது கைது செய்யப்பட்ட 22,000 பேர் மன்னிக்கப்பட்டதாக அரசு கூறினாலும், அவர்கள் வேறு காரணங்களுக்காக மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஈரான் அரசு கூறுவதை உறுதிப்படுத்துவது கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து மரண தண்டனைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும், மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களையும் விடுவிக்க வேண்டும், பெண்கள் மற்றும் சிறுமிகள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட அனைவரும் கருத்து சுதந்திரத்துக்கான உரிமைகளை சட்டபூர்வமாக பயன்படுத்துவதற்காக அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஈரானை, ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தி உள்ளார்.