எகிப்தில் மோதிய வாகனங்கள்; பரவிய தீ- 35 பேர் பலியான சோகம்!
29 Oct,2023
.
எகிப்தில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 32 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், 63 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எகிப்தின் தலைநகர் கெய்ரோ - அலெக்சாண்ட்ரியா நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் சென்ற கார்கள் நேற்று திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில், பயணியர் பேருந்து உட்பட மற்ற வாகனங்களும் விபத்தில் சிக்கின.
இவ்விபத்தில் பல வாகனங்கள் மோதிக்கொண்டதாகவும், அவற்றில் சில தீப்பிடித்ததாகவும் கூறப்படுகின்றது. விபத்து நடந்த இடத்திற்கு உடனடியான மீட்புப்படையினர் அனுப்பப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் போக்குவரத்து மோதல்கள் சகஜமானவை, சாலைகள் பெரும்பாலும் மோசமான நிலையில் உள்ளன மற்றும் நெடுஞ்சாலை குறியீடு பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. இதனால் அங்கே அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீது பஸ் மோதியதே அடுத்தடுத்த வாகனங்கள் விபத்துக்குள்ளானதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் கசிவு காரணமாக மற்ற வாகனங்களுக்கும் தீ பரவியுள்ளது. இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை அந்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.