தொடர்ந்து நடந்துவரும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில், மீண்டும் காஸாவில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அருகே வெடிகுண்டுகள் வெடித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
காஸா துண்டு நிலப் பகுதியில் மேலும் 320 இடங்களக் குறிவைத்து தாக்குதல் நடத்தியிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இதனிடையே தங்களுடையே இல்லங்கள் எந்தவிதமான எச்சரிக்கையும் இன்றி தாக்கப்பட்டதாக பாலத்தீன ஆட்சியகம் கூறியுள்ளது.
கடந்த சில மணிநேரங்களில் காஸாவில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு அருகில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த மருத்துவமனைகளில் காஸாவின் மிகப்பெரிய மருத்துவ வளாகமான அல்-ஷிஃபா, அல்-குத்ஸ் மற்றும் இந்தோனேசிய மருத்துவமனை ஆகியவை அடங்கும் என்று பாலத்தீனிய ஊடகங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தனது டெலிகிராம் சேனலில், அல்-குத்ஸ் அருகே நடந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இது குவைத் மருத்துவமனைக்குப் பின்னால் நடந்ததாகக் கூறி இடிந்த ஒரு கட்டிடத்தின் படங்களையும் அது வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோ மற்றும் படங்களை பிபிசியால் இன்னும் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
அந்தப் பகுதிகளில் உள்ள இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதா என்பதை உறுதிப்படுத்துமாறு பிபிசி இஸ்ரேல் தற்காப்புப் படைகளைக் கேட்டுள்ளது, மேலும் அவர்கள் சோதனை செய்வதாக எங்களிடம் கூறியுள்ளனர்.
காஸாவில் பலி 5,000-ஐ தாண்டியது - ஒரே நாளில் 436 பேர் பலி
காஸாவில் கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியதில் இருந்து இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் இஸ்ரேல் தாக்குதலில் 436 பேர் பலியானதாகவும், இதுவரை மொத்தம் 5,087 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாலத்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அவர்கள் அளித்த தகவல்படி, கொல்லப்பட்டவர்களில் 2,055 பேர் குழந்தைகள், 1,119 பேர் பெண்கள், 217 பேர் மூத்த குடிமக்கள். அத்துடன், 15,273 பேர் காயமடைந்திருப்பதாகவும் பாலத்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காஸாவில் மற்ற அரசு அமைப்புகளைப் போல சுகாதாரத்துறையும் ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காஸா மீது 2 வாரங்களுக்கும் மேலாக வான்வழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், முதன் முறையாக தரைவழியே எல்லை தாண்டியுள்ளது. தரைவழியே படையெடுக்க காஸா எல்லையை ஒட்டி ஏற்கனவே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகளில் ஒரு பிரிவினர் இரவோடு இரவாக எல்லை தாண்டி காஸாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருக்கிறது.
காஸா பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இரவில் புகுந்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. முழுவீச்சிலான தரைவழி படையெடுப்பின் தொடக்கம் அல்ல என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
இந்த நடவடிக்கையில் இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக் கிழமை ஒரு அரிய நிகழ்வில், இஸ்ரேல், மேற்குக் கரை பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
மேற்குக் கரையில் ஹமாஸ் குழு ஒரு மசூதியை ‘பயங்கரவாத வளாகமாகப்’ பயன்படுத்துவதாகக் கூறி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்குக் கரையின் வடக்கில் உள்ள ஜெனின் நகரத்தில் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியது.
அல்-அன்சார் என்றழைக்கப்படும் இந்த மசூதி தாக்கப்பட்டதில் இருவர் உயிரிழந்ததாக பாலத்தீன அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து வெளியான படங்கள் மசூதிக் கட்டிடம் குறிப்பிடத்தக்க வகையில் சேதமடைந்திருப்பதைக் காட்டின
இஸ்ரேலிய ராணுவம் மேற்குக் கரையில் உள்ள இலக்குகளைத் தொடர்ந்து சோதனையிட்டாலும், அது காஸாவில் நடத்துவதுபோல வான்வழித் தாக்குதல்களை மேற்குக் கரையில் அரிதாகவே பயன்படுத்துகிறது.
சம்பவ இடத்தில் இருந்து வெளியான படங்கள் மசூதிக் கட்டிடம் குறிப்பிடத்தக்க வகையில் சேதமடைந்திருப்பதைக் காட்டின.
கொல்லப்பட்டவர்கள் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஒரு ‘பயங்கரவாதத் தாக்குதலுக்கு’ தயாரகி வந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியிருக்கிறது.
அவர்கள் பயன்படுத்திய இடம் மசூதியின் கீழ் இருப்பதாகவும், ஜூலை முதல் பயன்பாட்டில் இருப்பதாகவும் அது கூறியது. வளாகத்தின் நுழைவாயில்கள், ஆயுதங்கள், கணினிகள் மற்றும் தளத்தில் படமாக்கப்பட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் புகைப்படங்களுடன் அது கூறிய படங்களை வெளியிட்டது.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் காலன்ட் இஸ்ரேல் இராணுவத்தின் செயல்பாப்டுகள் இன்னும் மூன்று மாதங்கள் வரை தொடரலாம் என்று தெரிவித்துள்ளார்
இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை மூன்று மாதங்கள் தொடரலாம்
காஸாவில் இஸ்ரேல் இராணுவத்தின் செயல்பாடுகள் இன்னும் மூன்று மாதங்கள் வரை தொடரலாம், ஆனால் இறுதியில் ஹமாஸ் கண்டிப்பாக இருக்காது, என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் காலன்ட் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய விமானப்படையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் சூழ்நிலையைப் பற்றிக் கேட்டறிந்த பிறகு கேலன்ட் இதைத் தெரிவித்தார்.
"செயல்பாட்டு அம்சங்களைப் பொறுத்தவரை, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளைத் தடுக்க எதனாலும் முடியாது," என்று அவர் கூறினார்.
"காஸாவில் இதுவே எங்களின் கடைசி நடவடிக்கையாக இருக்கும். இதற்குப் பிறகு ஹமாஸ் இருக்காது," என்றார் அவர்.
மேலும், கேலன்ட், அடுத்த கட்டமாக, பரவலாக எதிர்பார்க்கப்பட்ட தரைப்படை நடவடிக்கை, ‘விரைவில் வரும்’ என்றார். ஆனால், எவ்வளவு விரைவில் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மனிதாபிமான உதவிகள்
மேலும் 14 டிரக்குகள் மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளதாக ஐ.நா.வின் மனிதாபிமானத் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.
பாலத்தீனியர்களுக்கு இது ‘மற்றொரு சிறிய நம்பிக்கை’ என்று அவர் கூறினார். ஆனால் இன்னும் அதிகமான உதவிகள் தெவைப்படும் என்று கூறினார்.
தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபாம் இந்த நடவடிக்கையை வரவேற்றிருக்கும் அதேவேளை வெகுவாக பதிக்கப்பட்டிருகும் காஸா, ‘ஒரு நாளைக்கு ஒரு சில டிரக்குகளை அனுப்புவது மட்டுமே போதுமானதாக இல்லை’ என்று கூறியிருக்கிறது.
‘கைதிகளை விடுவிக்காத வரை காஸாவுக்கு உதவிகள் அனுப்பக் கூடாது’
இந்நிலையில், இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான பாதுகாப்பு அமைச்சர், இதமார் பென் க்விர், "ஹமாஸ், தன் பிடியில் இருக்கும் அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுவிக்கச் சம்மதிக்கும் வரை காஸாவிற்குத் தொடர்ந்து உதவிகள் அனுப்பக் கூடாது" என்று கூறியுள்ளார்.
ஞாயிறன்று மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற14 டிரக்குகளின் காஸாவில் நுழைய அனுமதிக்கப்பட்ட செய்தியைத் தொடர்ந்து, X சமூக ஊடகத்தில் பென்-க்விர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
கடத்தப்பட்ட அனைவரையும் விடுவிப்பதை உறுதிசெய்யாமல் காஸாவுக்குத் தொடர்ச்சியாக உதவிகள் அனுப்புவதுதான் இந்தப் பிரச்னைகள் இவ்வளவு பெரிதாகக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
‘கடத்தப்பட்ட அனைவரையும் விடுவிப்பதற்கு ஈடாக மட்டுமே மனிதாபிமான உதவிகள்,’ என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.
,
அடுத்த இரண்டு நாட்களில், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்ட மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோரின் இஸ்ரேலுக்குப் பயணம் செய்வர்
இஸ்ரேலுக்குச் செல்லவுள்ள நெதர்லாந்து, ஃபிரான்ஸ் தலைவர்கள்
அடுத்த இரண்டு நாட்களில், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்ட மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோரின் இஸ்ரேலுக்குப் பயணம் செய்வர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இரு தலைவர்களும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வந்து அவரைச் சந்திப்பார்கள் என்று அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நெதன்யாகு இன்று இரு ஐரோப்பிய தலைவர்களுடனும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸுடனும் பேசினார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷேல்ஸ் ஆகியோர் இஸ்ரேலுக்குப் பயணங்கள் மேற்கொண்டனர்.