இரண்டு அமெரிக்க பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்: இஸ்ரேல் உறுதி
21 Oct,2023
விடுவிக்கப்பட்ட தாய் மற்றும் மகள்
டெல் அவிவ்: இரண்டு அமெரிக்க பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்து உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 7-ம் தேதி ஏராளமான இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை ஹமாஸ் தீவிரவாதிகள் சிறைபிடித்து சென்றனர். இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலை தொடர்ந்து அவர்கள் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில் பிணைக் கைதிகளில் சிலர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான பேரை இஸ்ரேல் மீட்டது. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த தாய் மற்றும் மகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.
சிகாகோவை சேர்ந்த ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது மகள் நடாலி ரானன் ஆகியோர் தற்போது இஸ்ரேல் பாதுகாப்பு படையின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தெற்கு இஸ்ரேல் பகுதிக்கு அவர்கள் இருவரும் வந்திருந்த போது ஹமாஸ் அமைப்பினரிடம் அவர்கள் சிக்கியதாக அவர்களின் குடும்பத்தார் தெரிவித்திருந்தனர்.
மனிதத்துவ அடிப்படையில் அவர்கள் இருவரையும் ஹமாஸ் விடுவித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், அவர்கள் வசம் குழந்தைகள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பிணைக் கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
“ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்து சென்ற நிலையில், இன்று விடுவிக்கப்பட்ட இரண்டு அமெரிக்கர்களுடன் நான் பேசினேன். அவர்கள் இதிலிருந்து மீண்டு வர அரசாங்கம் அவர்களுக்கு முழு ஆதரவளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் கத்தார் அரசின் உதவி இருப்பதாக தகவல். அண்மையில் பைடன் இஸ்ரேல் செந்திருந்தார்.