மகிந்த மீது கை வைத்தால்..! எச்சரிக்கை
10 May,2026
தற்போதைய அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவை அரசியல் ரீதியாக பழிவாங்க நினைத்தால் பாரதூர விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
மஹிந்தவை பழிவாங்கல் நினைத்தால், அதற்கு எதிராக லட்சக் கணக்கான மக்களின் அடுத்த போராட்டம் எவ்வாறிருக்கும் என்பதை அரசாங்கத்தினால் பார்த்துக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இன்று கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வாரங்களில் மஹிந்தவிற்கு எதிராக அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் குற்றங்களை அம்பலப்படுத்துவோர் அல்லது பிரதான சாட்சியாளர்கள் மர்மமான முறையில் உயிரிழக்கும் நிலைமைகளை அவதானிக்க முடிவதாகத் தெரிவித்துள்ளார்.
323 கொள்கலன் மோசடி மற்றும் திறைசேரியில் இடம்பெற்ற மோசடி என்பனவற்றுடன் தொடர்புடைய நபர்கள் உயிரிழந்ததனை உதாரணமாக கூற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு, ஜே.வி.பி.யின் கட்சிக் காரியாலயத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
சுயாதீன ஆணைக்குழு என்ற வகையில் பொதுமக்கள் பணத்தை கொள்ளையிட்ட உண்மையான மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென சவால் விடுத்துள்ளார்
. மேலும் ராஜபக்சக்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களின் ஒன்றையும் இதுவரையில் நிரூபிக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச மீது கை வைக்க முயற்சித்து பிரச்சினைகளில் சிக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கோருவதாகத் தெரிவித்துள்ளார். லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் மஹிந்தவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பதிலளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.