கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் முதன்முறை! அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 22 பிக்குமார்
26 Apr,2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள குஷ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்களுடன் 22 துறவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், நேற்று இரவு விமான நிலையத்தில் அவர்கள் நடத்திய சோதனையின்போது, சந்தேகத்திற்கிடமான துறவிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கொண்டு வந்திருந்த பயணப் பைகளில் பாடசாலை உபகரணங்கள், பல்வேறு இனிப்புகள் மற்றும் போலிப் பைகள் தயாரிக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் 110 கிலோகிராமுக்கும் அதிகமான குஷ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போதைப்பொருட்கள்
ஒவ்வொரு துறவிகளின் பயணப் பையிலும் 5 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேகநபர்கள், ஒரு நபரின் அனுசரணையுடன் வழங்கப்பட்ட விமான டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி கடந்த 22ஆம் திகதி தாய்லாந்துக்குச் சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் துறவிக் கோலத்தை விடுத்து, சிவில் உடைகளை அணிந்து பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களாக புகைப்படம் மற்றும் காணொளிகள் அவர்களின் கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
துறவிகள் குழு
கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இதுவாகும்.
அத்துடன், துறவிகள் குழுவொன்று போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமும் இது எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் எனவும், அவர்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயின்று வரும் மாணவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, இந்த 22 சந்தேகநபர்களும் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்