கொழும்பு - ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: இருவர் கைது!
28 Feb,2026
கொழும்பு - ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 14ஆம் திகதி கொழும்பு - ஜிந்துபிட்டி பகுதியில், துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்து, மேலும் நால்வரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வு பணியகத்தினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதற்கமைய, நேற்று வெள்ளிக்கிழமை (27) முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது, கடவத்தை - சூரியபாலுவ பகுதியில் வைத்து ஆண் சந்தேகநபரும், வெல்லம்பிட்டிய - வெஹெரகொடெல்ல பகுதியில் வைத்து பெண் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர் சேதவத்தை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனவும், சந்தேகநபரான பெண் வெஹெரகொடெல்ல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்படும் போது, ஆண் சந்தேகநபரிடம் 06 கிராம் 540 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், பெண் சந்தேகநபரிடம் 03 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வு பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குற்றத்தின் பின்னர் துப்பாக்கிதாரியை ஆயுதத்துடன் அழைத்துச்சென்ற முச்சக்கரவண்டியின் சாரதி என்பதும், சந்தேகநபரான பெண் அவருக்கு உதவியாக இருந்ததும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரையும் 07 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.