புயலால் இலங்கை 5B பில்லியன் டாலர்கள் நஷ்டமடைந்துள்ளது World Bank
23 Dec,2025
இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் பெரும் அழிவை ஏற்படுத்திய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட நேரடிப் பாதிப்புகள் சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டாலர் (இலங்கை மதிப்பில் பல ஆயிரம் கோடி ரூபாய்) என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கையை டிசம்பர் 22 அன்று உலக வங்கி வெளியிட்டுள்ளது.
இந்த இயற்கைப் பேரிடரால் 640-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, இலங்கையின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளைச் சிதைத்துள்ளன. உலக வங்கியின் ‘கிரேடு’ (GRADE) அறிக்கையின்படி, சாலைகள், பாலங்கள், ரயில்வே மற்றும் குடிநீர் விநியோகக் கட்டமைப்புகள் ஆகியவையே அதிகபட்சமாக 1.735 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தைச் சந்தித்துள்ளன. இந்த ஒட்டுமொத்த இழப்பானது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 4 சதவீதத்திற்குச் சமமானது என்பது குறிப்பிடத்தக்கது. இது நாட்டின் பொருளாதார மீட்சியில் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு வசதி மற்றும் பொதுக் கட்டிடங்கள் சந்தித்த இழப்புகளும் மிக அதிகம். சுமார் 985 மில்லியன் டாலர் மதிப்பிலான வீடுகள் சேதமடைந்துள்ளன, இது மொத்த சேதத்தில் 24 சதவீதமாகும். மேலும், ஆறுகள் மற்றும் ஓடைகளின் ஓரம் அமைந்திருந்த பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகள் சுமார் 562 மில்லியன் டாலர் மதிப்பிலான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. இந்த மதிப்பீடு கட்டிடங்களுக்கான நேரடிச் சேதத்தை மட்டுமே குறிப்பதாகவும், வருமான இழப்பு அல்லது முழுமையான புனரமைப்புச் செலவுகளை இது உள்ளடக்கவில்லை என்றும் உலக வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து இலங்கை மீண்டு வர உதவும் வகையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களிலிருந்து 120 மில்லியன் டாலர் நிதியை அவசரகாலப் பேரிடர் மீட்புப் பணிகளுக்காக மாற்றியமைக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் உருக்குலைந்துள்ள பகுதிகளைச் சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. சர்வதேச சமூகத்தின் உதவியுடன் இலங்கை இந்தப் பெரும் பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.