அரச நிவாரணங்களை பெறக்கூடியவர்களின் பட்டியலில் பெருந்தோட்ட வீடுகளில் வசிப்பவர்களையும் உள்ளடக்கி புதிய சுற்று நிரூபம் வெளியீடு
15 Dec,2025
தித்வா புயலால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் குடியிருப்புகளை இழந்தவர்களுக்கான அரச நிவாரணங்களை பெறக்கூடியவர்களின் பட்டியலில், பெருந்தோட்ட வீடுகளில் வசிப்பவர்களையும் உள்ளடக்கி புதிய சுற்று நிருபத்தை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
2025.12.14 திகதியிடப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் புதிய சுற்று நிருபத்தில் தித்வா இயற்கை அனர்த்தத்தில் குடியிருப்புகளை இழந்தவர்களுக்கான அரச நிவாரணங்களை பெறத் தகுதியானோர் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னர் வெளியிடப்பட்டிருந்த சுற்று நிரூபத்தில் அந்த விடயம் தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
முன்னைய சுற்று நிருபங்களில் இடம்பெறாத வகையில், இம்முறை பெருந்தோட்ட வீடுகளில் வசிப்பவர்களும் நிவாரணத்திற்கு தகுதியானவர்களாக சேர்க்கப்பட்டுள்ளது. நவம்பர் 21 முதல் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பகுதியளவில் அல்லது முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தப்படுத்துவதற்கு 25 000, வீட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 50 000 என 75 000 ரூபாவை ஒரே தடவையில் வழங்குவதற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த கொடுப்பனவுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்று நிருபத்தில் 1.2 பிரிவில் நிலவுரிமை என்ற அத்தியாயத்தின் கீழ், 'நில உரிமை மற்றும் வருமான அளவைப் பொருட்படுத்தாமல் இந்த உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். பேரிடரால் பாதிக்கப்பட்ட நிரந்தர வீட்டு உரிமையாளர்கள், பெருந்தோட்ட வீடுகளில் வசிப்பவர்கள், வாடகை வீடுகளில் வசிப்பவர்கள், அங்கீகரிக்கப்படாத வீடுகளில் வசிப்பவர்கள், அரசு அலுவலக வீடுகள் மற்றும் அரசு பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் இல்லங்களில் வசிப்பவர்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான குடியிருப்பு மையங்கள் ஆகியோருக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 2025.12.05ஆம் திகதியிடப்பட்ட சுற்று நிருபத்தில் அனைத்து மக்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் என்ற பதம் இருந்தாலும் அதன் 6ஆம் பிரிவில், 'நிவாரணங்களுக்கான பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதிலும், சேதத்தை மதிப்பிட வேண்டிய சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட 2025-01-21 ஆந் திகதிய 01ஃ2025 ஆம் இலக்க அனர்த்த நிவாரண சேவைகள் வழிகாட்டுதல்களைப் பயன்படுத்துதல் வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் முன்னைய சுற்று நிருபத்தின் படி (2020 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக செயற்பாட்டில் உள்ள) தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் மாத்திரமே கிடைக்கும் நிலைமை இருந்தது. இந்த நிலைமை தொடர்பில் கடந்த 9ஆம் திகதி நுவரெலியா மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இது குறித்து தெரியப்படுத்தியிருந்த நிலையில், இப்புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.